காவிரி நீர் பிரச்சனை: காங்கிரஸ் கட்சி மட்டும் ஏன் அடம்பிடிக்கிறது? – நயினார் கேள்வி!

Published On:

| By Pandeeswari Gurusamy

nainar nagendhiran

கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தபோது காவிரி நதிநீர் ஒழுங்காகத் திறக்கப்பட்டது; ஆனால் காங்கிரஸ் கட்சி மட்டும் ஏன் அடம்பிடிக்கிறது என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து ஈரோட்டில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (ஆகஸ்ட் 3) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் “தமிழகத்தில் வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதியே குறுவை சாகுபடி பணிகள் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததால் நடவுப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்திருக்க வேண்டும். ஆனால் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.

ADVERTISEMENT

தமிழகத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காவிரி நீர் விவகாரம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்றுள்ளார். மாணிக்கம் தாகூர், மத்திய அரசு இந்த விஷயத்தில் என்ன செய்கிறது என்று கேட்கிறார். இதில் முழு அதிகாரமும் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திடம் தான் உள்ளது. அவர்கள் பிறப்பிக்கும் உத்தரவை கர்நாடக மாநில அரசு அமல்படுத்த வேண்டும்.

2018-க்குப் பின் பாஜக ஆட்சியில் இருந்தபோது எல்லாம் தண்ணீர் சரியாகத் திறக்கப்பட்டது. தற்போது காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது அவசியமில்லாமல் அடம் பிடிக்கிறார்கள்” என்றார்.

ADVERTISEMENT

திமுக நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சென்றது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் நீதிமன்றத்தை நாடுவது காலதாமதத்தை மட்டுமே ஏற்படுத்தும்.

தமிழகத்தில் 2 காங்கிரஸ் கட்சி அமைச்சர்கள் உள்ளனர். கர்நாடகாவிலும் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் உள்ளது. முதலமைச்சர் விஜய் போனில் பேசினாலே போதுமானது; இதற்கு உச்சநீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியமே இல்லை” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share