ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு சலுகையா? உடனே நிறுத்துங்க… ஊழல் வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு!

Published On:

| By Kavi

வழக்கு தொடர அனுமதி வழங்கும் விஷயத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளிடம் ஏன் விளக்கம் கேட்க வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பி உள்ளார். 

சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர்களில் 98 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

ADVERTISEMENT

இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தவில்லை என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு எதிராக அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார். 

ADVERTISEMENT

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இரு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுவது தொடர்பாக கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

டெண்டர் முறைகேடு வழக்கில் சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் கே. கந்தசாமி, விஜய கார்த்திகேயன் ஆகியோரை விசாரணை செய்ய மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த வழக்கு மீண்டும் கடந்த ஜூலை 22 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, கடந்த ஐந்து மாதங்களாக பொதுத்துறை செயலாளரிடம் இந்த வழக்கு சம்பந்தமான கோப்புகள் நிலுவையில் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரீட்டா ஹரிஷ் தாக்கர் காணொளி காட்சி மூலம் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். 

தொடர்ந்து இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 3) விசாரணைக்கு வந்த போது, டெண்டர் முறைகேடு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசின் அனுமதியை பெறுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து ஓய்வு பெற்ற பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. 

இதனால் அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து நீதிபதி விலக்கு அளித்தார்.

தொடர்ந்து, குற்ற வழக்குகளில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி அளிப்பதற்கு முன்பாக அவர்களுக்கு மட்டும் ஏன் விசாரணைக்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். 

இத்தகைய நடைமுறையை நாங்கள் கேள்விப்பட்டதில்லையே. 

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மட்டும் இந்த சிறப்பு சலுகை வழங்கப்படுவது ஏன்? 

இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share