கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கிய ஆணையை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு ஜூலை 29-ந் தேதி மேல்முறையீடு செய்துள்ளது.
2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பெண்கள், 10 குழந்தைகள் மற்றும் 13 ஆண்கள் உட்பட மொத்தம் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தவெக தலைவர் விஜய் முதல்வரானார். இதனையடுத்து கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்ப வாரிசுதாரர்களில் தலா ஒருவருக்குத் தகுதி அடிப்படையில் அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் கடந்த ஜூலை 10-ந் தேதி வழங்கினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சூளையைச் சேர்ந்த வழக்கறிஞர் என். பிரபாகரன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தீரன் திருமுருகன், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில நிர்வாகி சீனி அகமது மற்றும் திண்டுக்கல் வேடசந்தூரைச் சேர்ந்த சந்தோஷ் குமார் ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் அமர்வு தமிழக அரசு வழங்கிய இந்த அரசுப் பணி ஆணைகளை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும் பொது வேலைவாய்ப்பில் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14 மற்றும் 16-ன் கீழ் உள்ள சமஉரிமை மற்றும் சமவாய்ப்பு விதிகளை இது மீறுவதாகவும், உரிய விதிகள் மற்றும் பணி மூப்புப் பட்டியலின் அடிப்படையில் மட்டுமே கருணை பணிகளை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
அரசுப் பணிகளுக்குப் பதிலாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் திறன் வளர்ப்பு மற்றும் தொழில் முனைவோர் பயிற்சிகள் மூலம் உதவலாமே என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அளித்த இத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு ஜூலை 29-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அதில், “41 பேரின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கியது தமிழக அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
