இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்து போட்டி ஏன் – பெ.சண்முகம் விளக்கம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

மதுராந்தகம், தாராபுரம் இடைதத்தேர்தலில் ஏற்கனவே அதிமுக – பிஜேபி அணி, திமுக அணி, தவெக அணி என்று மூன்று அணிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அணி எதிலேயுமே இடதுசாரிகள் இல்லை என பெ.சண்முகம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து திருச்சியில் இன்று (செப்டம்பர் 13) செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறுகையில், “”நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு சட்டப்பேரவை தொகுதியினுடைய இடைத்தேர்தல் சம்பந்தமாக மாநிலக்குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) ஆகிய இடதுசாரி கட்சிகளின் சார்பில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளிலும் இடதுசாரி கட்சிகளின் சார்பில் தனித்துப் போட்டியிடுவது என்கிற முடிவை மாநிலக்குழு எடுத்திருக்கிறது .

ADVERTISEMENT

இதற்கான அடுத்து வேட்பாளர் அறிமுகம் உள்ளிட்ட விஷயங்கள், சிபிஐ, சிபிஎம், சிபிஐ(எம்எல்) லிபரேஷன் ஆகிய மூன்று கட்சியினுடைய மாநில செயலாளர்களும் கலந்துகொண்டு 15ஆம் தேதி சென்னையில் வேட்பாளர் அறிமுகம் நடைபெறும்.

இந்த தேர்தலில் ஏற்கனவே அதிமுக – பிஜேபி அணி, திமுக அணி, தவெக அணி என்று மூன்று அணிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அணி எதிலேயுமே இடதுசாரிகள் இல்லை. ஆகவே நடைபெற இருக்கிற சட்டப்பேரவை தேர்தல் என்பது ஒரு பொதுத்தேர்தலோ ஆட்சி மாற்றத்துக்கான தேர்தலோ இல்லை. ஆகவே இந்த இடைத்தேர்தலில் இடதுசாரிகள்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிடுவது என்று நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.

ADVERTISEMENT

வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட விஷயங்கள் அடுத்த ஒரு சில நாட்களில் நடைபெறும், வரும் 16ஆம் தேதி வேட்புமனுவுக்கான கடைசி நாள் என்கிற முறையில், அதற்கு முன்பாக வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை நாங்கள் எடுத்து அறிவிப்போம்.”

அப்போது இந்த தேர்தல்ல உங்க பிரச்சாரம் எப்படி இருக்கும்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ” தவெக ஆட்சிக்கு வந்து 120 நாட்கள் ஆகிறது. இந்த 120 நாட்களில் சட்டமன்றத்தில் நடக்கிற நிகழ்வுகள், அவர்களுடைய நிதிநிலை அறிக்கையில்… நவீன தாராளமய பொருளாதார கொள்கையை அமல்படுத்தக்கூடிய பல்வேறு அம்சங்கள் என்பது அதில் இருந்திருக்கிறது. தோழமை கட்சி என்ற முறையில், ஆதரவு தரக்கூடிய கட்சி என்கிற முறையில் பல்வேறு விஷயங்களில் அவர்களோடு மாறுபடுகிற விஷயங்களை அவ்வப்போது அறிக்கைகள் வாயிலாகவும், பேட்டிகள் வாயிலாகவும் ஏற்கனவே நாங்கள் வெளிப்படுத்தி வந்திருக்கிறோம்.

ADVERTISEMENT

அமைச்சர்களிடம் நேரடியாக, இதையெல்லாம் செய்யக்கூடாது, இந்தந்த சட்டங்களை எல்லாம் நிறைவேற்றக்கூடாது என்பதையும் நாங்கள் வற்புறுத்தி இருக்கிறோம். சிலவற்றை ஏற்றுக்கொண்டார்கள், பலவற்றை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படிப்பட்ட ஒரு நிலைமையில் தான் இப்போது இருக்கக்கூடிய அரசாங்கம் என்பது இருந்துகொண்டிருக்கிறது.

சட்டமன்றம் ஜனநாயகப்பூர்வமாக நடைபெற வேண்டும், மக்கள் பிரச்சனைகளை விவாதிக்கும் மன்றமாக அது நடைபெற வேண்டும், லாவணி கச்சேரி மன்றமாக இருக்கக்கூடாது என்பதை எல்லாம் ஏற்கனவே நாங்கள் வெளிப்படுத்தியிருக்கிறோம். இந்த எல்லா அம்சங்களும் இடைத்தேர்தல் பிரச்சாரத்திலே கட்டாயம் இடம்பெறும்.

இடதுசாரி கட்சியின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் எவ்வளவு சிறப்பான முறையில் மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி சட்டமன்றத்தை அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ஆகவே, இந்த இரண்டு தொகுதிகளில் இருந்தும் இடதுசாரி கட்சியினுடைய வேட்பாளர்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வது என்பது மேலும் மக்கள் குரலை வலுவாக சட்டமன்றத்தில் எதிரொலிப்பதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். ஆகவே இடதுசாரி சக்திகளை வலுப்படுத்துவதற்கும், இடதுசாரி சக்திகளுக்கு ஒரு வாய்ப்பளியுங்கள் என்கிற முறையில் அந்த இரண்டு தொகுதியினுடைய வாக்காளர்களையும் நாங்கள் வந்து கேட்டுக்கொள்ள விரும்புகிறோம்.” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share