தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஜூன் 19) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சிவசங்கர் கலந்துகொண்டு பேசினார். அப்போது, நேற்று தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய ஆளுநரின் உரையை, பிரபல திரைப்பட இயக்குநர் அட்லியின் படங்களுடன் ஒப்பிட்டு அவர் பேசியது அவையில் கவனம் ஈர்த்துள்ளது.
சட்ட மன்ற விவாதத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர், “திரைப்பட இயக்குநர் அட்லீ, பல படங்களில் இருந்து காட்சிகளை வெட்டி, ஒட்டி (காப்பி அடித்து) படம் எடுப்பார். அதுபோலத்தான், தற்போதைய ஆளுநர் உரையும் திமுக அரசின் சாதனைகளை ஆங்காங்கே வெட்டி, ஒட்டித் தயாரிக்கப்பட்டுள்ளது” என்று விமர்சித்தார்.
சிவசங்கரின் இந்த விமர்சனத்திற்குப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உடனடியாக எழுந்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். “சட்டமன்றத்திற்கும் இயக்குநர் அட்லிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? தமிழ்நாடு முதலமைச்சர் திரைப்படத்துறையில் இருந்து மக்கள் பணிக்கு வந்தவர் தான். ஆனால், சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் இங்குத் திரைப்படத் துறையைப் பற்றி, குறிப்பாக ‘டிரெய்லர் அட்லி’ என்றெல்லாம் பேசுகிறார். சட்டமன்றத்திற்கும் திரைப்பட இயக்குநர் அட்லிக்கும் என்ன தொடர்பு? காலங்கள் மாறிவிட்டன. அதனுடைய சாட்சியாகத்தான் இன்றைக்குத் தமிழக வெற்றிக் கழக (தவெக) உறுப்பினர்கள் இந்த அவையிலே அமர்ந்திருக்கிறார்கள்” என்று அமைச்சர் ராஜ்மோகன் பதில் அளித்தார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர், “நான் அட்லியைப் பற்றி மட்டுமல்ல, தேவைப்பட்டால் சட்னியைப் பற்றிக்கூட இந்த அவையில் பேசுவேன்” என்றார்.
ஆளுநர் உரை மீதான விவாதத்தில் சினிமா இயக்குநரின் பெயர் இழுக்கப்பட்டதும், அதற்கு அமைச்சரின் தவெக குறித்த பதிலும் சட்டப்பேரவையில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
