சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு காரணம் என்ன என்பது குறித்து ஆராய்வதற்கான கூட்டத்தை கூட்ட முடியுமா? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அக்கட்சியின் அதிருப்தி அணி தலைவர்களில் ஒருவரான சிவி சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னையில் இன்று ஆகஸ்ட் 10-ந் தேதி சிவி சண்முகம், செய்தியாளர்களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றதிலிருந்து இன்றுவரை, ஒரு சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும், எதிலுமே வெற்றி பெற முடியவில்லை.
”நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலே 47 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றதற்கு, எடப்பாடியினுடைய சொந்த செல்வாக்குதான் காரணம்” என்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டி கொடுக்கிறார்.
அப்படியானால் வெற்றி பெறாத அனைத்து தொகுதிகளிலும் எடப்பாடி பழனிச்சாமி செல்லாக் காசு ஆகிவிட்டாரா? செல்வாக்கு இல்லையா?
அக்ரி கிருஷ்ணமூர்த்தி எங்களை தாழ்த்துவதாக நினைத்துக்கொண்டு, எடப்பாடியை தரம் தாழ்த்தி பேசுகிறார். அவருக்கும் எடப்பாடிக்கும் என்ன உள் குத்து என்று தெரியவில்லை.
2024 நாடாளுமன்ற தொகுதியிலே சேலத்தில் ஏன் அதிமுக தோல்வி அடைந்தது? அவருடைய சொந்த பூத்திலேயே இரட்டை இலைக்கு குறைவான ஓட்டுதானே கிடைத்தது.. எடப்பாடிக்கு சொந்த ஊரில், அவர் குடி இருக்கிற ஊரிலேயே செல்வாக்கு இல்லையா?
இதை நாங்கள் கேட்க மாட்டோமா? சொல்ல மாட்டோமா? அன்றைக்கு இருந்த அரசியல் சூழ்நிலை, கூட்டணி நிலவரம் போன்றவற்றால் தோல்வி ஏற்பட்டது என்பதுதான் உண்மை.
தோல்விக்கு, மாவட்ட செயலாளர்களும், அந்தப் பொறுப்பாளர்களும் தான் காரணம் என்கிறார்கள். வெற்றி பெற்றால் 47 தொகுதிக்கு ஒரு தனிப்பட்ட செல்வாக்கு என்கிறார்கள். என்ன இது?
கிருஷ்ணகிரியில் கே.பி.முனுசாமி எத்தனை தொகுதியில் அதிமுகவை வெற்ற பெற வைத்தார்? கேபி முனுசாமியே வெற்றி பெறவில்லையே?
கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என 7 மாவட்டத்திலே 3 தொகுதிகளில்தானே அதிமுக வென்றது.. அங்கேயும் எடப்பாடிக்கு செல்வாக்கு இல்லையா?
தேர்தல் தோல்விக்கு கட்சி நிர்வாகிகள் மீது பழியைப் போடுகிற ஒரு தலைவரை இந்தியாவிலேயே எந்த கட்சியிலும் பார்க்க முடியாது.
தேசிய கட்சிகள், மாநிலக் கட்சிகள் தேர்தலிலே படுதோல்வி அடைந்தால், அந்த கட்சியினுடைய தலைவர் தார்மீகப் பொறுப்பேற்று, அதற்கு தோல்விக்கு நாங்கள் தான் காரணம் என்று பல தலைவர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள். மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி ராஜினாமா செய்யவில்லையா?
இப்போது நாங்கள் எடப்பாடியை ராஜினாமா செய்யுங்கள் என சொல்லவில்லை.. தோல்வி குறித்து ஆராய வேண்டும் என்றுதானே சொல்கிறோம்.
இதை சொன்னால் திமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சித்தது நாங்கள் என ஜமுக்காளத்தில் வடிகட்டப்பட்ட பொய்யை சொல்கிறார். யார் திமுக ஆதரவுடன் முதலமைச்சராக முயன்றது என்பது எல்லோருக்கும் தெரியும்? இதை எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சொன்னது எடப்பாடி பழனிசாமி.. அதனால்தான் திருமாவளவனை முதல்வராக்கும் திட்டத்தை ஏற்கலாம் என்றோம்.
உங்களுக்கு தெம்பும் திராணியும் இருந்தால் அதிமுகவின் தோல்விக்கான காரணத்தை ஆராயும் கூட்டத்தை கூட்டுங்கள்.. எங்களையும் அழையுங்கள்.. எங்கே நாங்கள் எல்லாவற்றையும் சொல்கிறோம்.
எங்கள் மீது வீண் பழி போடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். இதுதான் எங்களால் சொல்ல முடியும். இவ்வாறு சிவி சண்முகம் கூறினார்.
