பெரியார் திடலில் போலீஸை குவிப்பதா? தி.க.வினர் தீவிரவாதிகளா? சட்டசபையில் தமிமுன் அன்சாரி

Published On:

| By Mathi

Why is Police Gathering at Periyar Thidal? Thamimun Ansari

நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகத்தின் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு பெரியார் திடலில் போலீஸை குவித்தது ஏன்? திராவிடர் கழகத்தினர் என்ன தீவிரவாதிகளா? என்று சட்டசபையில் மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டசபையில் இன்று ஆகஸ்ட் 10-ந் தேதி தமிமுன் அன்சாரி பேசியதாவது: நாம் சட்டசபையை உணவு இடைவேளை இல்லாமல் தொடர்ச்சியாக நடத்துகிறோம். இது 3:00 மணிக்கு முடியுமா? 4:00 மணிக்கு முடியுமா எனத் தெரியவில்லை.

ADVERTISEMENT

ஆகையால் ஏற்கனவே உள்ள மரபுகளை பின்பற்றி காலை 9:30 மணிக்கு சட்டசபையை தொடங்கி பிற்பகல் 1:30 மணிக்கு முடித்து விடுங்கள். மாலை 5:00 மணிக்கு மீண்டும் சட்டசபை கூட்டத்தைத் தொடங்கி இரவு 8:00 மணி வரை கூட நாம் நடத்தலாம்.

அதேபோல புதிய வட்ட வடிவிலான சட்டமன்ற கட்டிடத்தை கட்டுவது தொடர்பாகவும் பரிசீலனை செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

நீட் தேர்வுக்கு எதிரான பரப்புரையை ஜனநாயக வழியிலும் அமைதியான முறையிலும் முன்னெடுத்த திராவிடர் கழகத்தின் பரப்புரைக்குத் தடைவிதித்தது நியாயமா?

பெரியாரை கொள்கைத் தலைவராக ஏற்றிருக்கிறீர்கள்.. நான் பாராட்டுகிறேன்.. மகிழ்ச்சி அடைகிறேன்.. வாழ்த்துகிறேன். அந்த பெரியார் திடலை சுற்றிலும் போலீசை குவித்து ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியது என்ன நியாயம்?

ADVERTISEMENT

டெல்லியில் நடைபெற்ற மாணவர்களுடைய போராட்டத்தினுடைய குறிக்கோள்கள் வேறு, தமிழ்நாட்டில் நடைபெற்ற மாணவர்களுடைய குறிக்கோள் என்பது வேறு. அவர்கள் நீட் தேர்வு குளறுடிகளுக்கு எதிராக மட்டும்தான் போராடினார்கள். நாமோ நீட் தேர்வு அடியோடு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற குரலோடு போராடினோம். அவர்கள் கொசுக்களை எதிர்க்கிறார்கள்.. நாம் சாக்கடையை மூட வேண்டும் என்று சொல்லுகின்றோம். வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும். அப்படி என்று சொன்னால் அந்த மாணவர்களின் மீது நாம் நெருக்கடியை கொடுத்து தாக்குதல் நடத்தியது சரியா?

நீட் விலக்கு கோரி மீண்டும் தீர்மானம்

இப்பொழுது தமிழ்நாடு மாணவர் இளைஞர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களை என்னை சந்தித்தார்கள். சென்னையிலே நான்கு பேர் பட்டினி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையை இன்று அடைந்திருக்கிறார்கள். நம்முடைய பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூட அவர்களை சந்தித்து ஆறுதல் படுத்தி இருக்கிறார். நாம் என்ன சொல்லுகிறோம் என்று சொன்னால் அந்த மாணவர்களுடைய பல கோரிக்கைகள் இருக்கலாம். பட்டினி போரை நடத்தி தமிழ்நாட்டு மக்களின் உணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மனிதாபிமானத்தோடு இதை நாம் அணுக வேண்டும். அவர்கள் ஒரு கோரிக்கையை என்ன சொல்கிறார் என்று சொன்னால் மீண்டும் இதே பேரவையிலே நீட்டுக்கு எதிரான நீட்டுக்கு முழுமையாக தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு வேண்டும் என்ற தீர்மானத்தை நாம் நிறைவேற்றுவோம். அதன் மூலமாக மொத்த இந்தியாவுக்கும் வகுப்பு எடுப்போம் என்று சொல்கிறார்கள். ஒரு நியாயமான கோரிக்கை தானே! அதையும் இந்த அரசு பரிசீலிக்கக் கூடாது என்று இந்த நேரத்திலே கேட்டுக்கொள்கிறேன்.

குடியுரிமை திருத்த சட்டத்தின் அடிப்படையில் ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் அல்லது அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட வேண்டும்.

தலைமுறை தலைமுறையாக முகாம்களில் வாடும் ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு தமிமுன் அன்சாரி பேசினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share