சென்னை திருவொற்றியூர் அருகே 5 வயது வடமாநிலச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்குக் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அச்சிறுமியைப் பெற்றோர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குச் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.
இதுகுறித்துச் சிறுமியின் பெற்றோர் உடனடியாகக் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தனது எக்ஸ் தளப் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “சென்னை திருவொற்றியூர் அருகே வடமாநிலத் தம்பதியின் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த சில மாதங்களாக இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதைக் கண்டும், பொறுப்பற்ற தமிழக அரசின் ஆட்சியில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மக்களை எண்ணியும் மனம் வருந்துகிறது.
வீண் விளம்பரத்திற்காகச் சினிமாத்தனமான சிறப்புப் படையை உருவாக்கியதைத் தவிர, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க இந்த அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய மருத்துவ மற்றும் சட்ட உதவிகளை வழங்குவதோடு, அவருக்கு நீதி கிடைப்பதையும், குற்றவாளிகளுக்குச் சட்டப்படி கடுமையான தண்டனை கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்,” என வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பதிவில், சென்னை திருவொற்றியூரில் 6 வயது வடமாநில சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அரசு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும்!
சென்னை திருவொற்றியூர் பகுதியில் பெற்றோருடன் வாழ்ந்து வந்த 6 வயது வடமாநில சிறுமி அதே பகுதியில் வசித்து வந்த வட மாநில இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தெய்வமாகக் கொண்டாடப்பட வேண்டிய குழந்தையை சீரழித்த மனித மிருகங்களை அரசும், காவல்துறையும் தப்பவிடக் கூடாது.
திருவொற்றியூரில் ஒரு வீட்டில் வாழ்ந்து வந்த சிறுமியின் பெற்றோர் மாலை நேரத்தில் பானி பூரி விற்க வெளியில் சென்றதை பயன்படுத்திக் கொண்டு அதே வீட்டின் மேல்தளத்தில் வசித்து வந்த வட மாநில இளைஞர்களான ராகுல், சித்தரஞ்சன், மனோஜ் ஆகியோர் இந்தக் கொடுமையை இழைத்ததாகக் கூறப்படுகிறது. தமக்கு நேர்ந்த கொடுமையைக் கூட பெற்றோரிடம் சிறுமியால் கூற முடியாத நிலையில், அதிக ரத்தப் போக்கு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமியை மருத்துவர் பரிசோதித்து தான் அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமையை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் சிறுமிக்கு உதவிய அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரும், அப்பகுதி மக்களும் இணைந்து குற்றவாளிகளில் இருவரை பிடித்து, தாக்கி காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். தப்பி ஓடிய இன்னொரு குற்றவாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அவனையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனையான தூக்குத் தண்டனை பெற்றுத் தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் எந்தப் பெண்ணுக்கும், எந்தக் குழந்தைக்கும் பாலியல் வன்கொடுமை இழைக்கப்படாமல் இருப்பதை தமிழக காவல்துறை உறுதி செய்ய வேண்டும்.” என வலிறுத்தி உள்ளார்.
