”தமிழ்நாட்டு மீனவர்கள் ‘எல்லை தாண்டி’ செல்வதால்தான் இலங்கையால் கைது செய்யப்படுகின்றனர்; தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி செல்லக் கூடாது என்கிற விழிப்புணர்வை தமிழக அரசுதான் ஏற்படுத்த வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கிய 1974-ம் ஆண்டு இந்தியா-இலங்கை ஒப்பந்தம் மற்றும் மீனவர்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்திய 1976-ம் ஆண்டு ஒப்பந்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை நீதிபதிகள் சஞ்சய் குமார், சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று அக்டோபர் 6-ம் தேதி விசாரித்தது. இந்த விசாரணையின் போது, மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி ஆஜரானார்.
அப்போது நீதிபதி சஞ்சய் குமார், ”இந்தியா-இலங்கை இடையேயான ஒப்பந்தம் தொடர்பாக இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி , ”மத்திய அரசு அந்த விவகாரத்துக்குள் செல்ல விரும்பவில்லை. ஆரம்பத்தில் அதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் ஒரு கட்டத்தில் அது கைவிடப்பட்டது. இலங்கையுடன் இந்தியாவுக்கு மிகச் சிறந்த உறவு உள்ளது. அதைக் கெடுத்துக்கொள்ள அரசு விரும்பவில்லை” என்றார்.
இதைத்தொடர்ந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்பாக விவாதம் நடந்தது.
அப்போது அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி, ”தமிழக கடற்பகுதியில் மீன்களின் இருப்பு பெருமளவில் குறைந்துவிட்டது. அதனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்கு செல்கின்றனர். இலங்கையின் கடல் எல்லைக்குள் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஆனாலும் தமிழக மீனவர்கள் அங்கு செல்கின்றனர். இலங்கை கடல் எல்லைக்குள் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க சென்றால் கைது செய்யப்படுவார்கள். நமது கடலை நாம் மாசுபடுத்துகிறோம். இலங்கை மீனவர்கள் இங்கு வருவதில்லை” என்றார்.
மேலும், தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளதாகவும், ராஜதந்திர ரீதியாக நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் பிரசாந்தோ சந்திர சென் எதிர்ப்பு தெரிவித்தார். தமிழக மீனவர்களால் கடல் மாசுபடுத்தப்படுகிறது என்ற வாதத்தை அவர் மறுத்தார்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது குறித்தும் நீதிபதி சஞ்சய் குமார் கேள்வி எழுப்பினார்.
மீனவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அரசியல் சாசனத்தின் முதல் அட்டவணையில் திருத்தம் செய்திருக்க வேண்டும்; ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை என்று வாதிட்டார். தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதையும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதையும் அவர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஹரிபிரியாவும், இந்தப் பிரச்சினைக்கு இலங்கை அரசுடன் பேசி மத்திய அரசுதான் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மீனவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய், மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தையும் தமிழக அரசு தரப்பு சுட்டிக்காட்டியது.
இந்த விசாரணையின்போது இலங்கை மக்களின் பொது ஒழுக்கம் குறித்தும் நீதிபதி சஞ்சய் குமார் கருத்து தெரிவித்தார். தாம் இலங்கைக்குச் சென்றிருப்பதாக கூறிய அவர், அங்கு சாலைகளில் மக்கள் குப்பைகளை வீசுவதை பார்க்க முடியவில்லை என்றும், இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கை மக்கள் பொது சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்த விழிப்புணர்வுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் அவர்கள் சாலைகளிலேயே குப்பை போடாதபோது கடலிலும் குப்பை கொட்ட மாட்டார்கள்; அதனால் மீன்கள் இலங்கை கடற்பகுதியை நோக்கிச் செல்லக்கூடும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் பிரச்சினைக்கு ஏதாவது தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி சஞ்சய் குமார், கடல் எல்லையில் குறிப்பிட்ட இடத்தைத் தாண்டிச் செல்லக்கூடாது என்று தமிழக மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
அதற்கு அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, மீனவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு என்றார்.
இந்திய மீனவர்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று முதலில் உத்தரவில் குறிப்பிட நீதிபதிகள் விரும்பினர். ஆனால் அத்தகைய கருத்து இந்தியா-இலங்கை ராஜதந்திர உறவை பாதிக்கக்கூடும் என்று அட்டர்னி ஜெனரல் ஆட்சேபனை தெரிவித்தார்.
இதனையடுத்து மீனவர்கள் பிரச்சினை குறித்து மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளதாகவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அட்டர்னி ஜெனரல் தெரிவித்ததை பதிவு செய்த உச்ச நீதிமன்றம், வழக்கின் விசாரணையை 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைத்தது.
