திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதியின் தேர்தல் வெற்றிக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று (அக்டோபர் 7) அதிரடியாக டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.
2026-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி போட்டியிட்டார். அவரை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சி.சிந்தாமணி போட்டியிட்டார்.
இந்தத் தேர்தலில் ரகுபதி 58,201 வாக்குகளையும், சிந்தாமணி 56,709 வாக்குகளையும் பெற்றனர். இதன் மூலம் 1,492 வாக்குகள் வித்தியாசத்தில் ரகுபதி வெற்றி பெற்றார்.
ரகுபதியின் வெற்றியை எதிர்த்து சிந்தாமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அதில், “2, 8, 63, 64, 65, 70, 76, 138, 139, 145, 153, 154, 158, 162, 230, 285, 292 ஆகிய வாக்குச்சாவடிகளில் வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறவில்லை; இந்த வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளை மறுஎண்ணிக்கை செய்ய வேண்டும்; 2021-ம் ஆண்டு தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் ரகுபதி தமக்கு எதிராக 26 குற்ற வழக்குகள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்; ஆனால் 2026 தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அவை தொடர்பான தகவல்கள் இடம்பெறவில்லை” என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இந்த தேர்தல் வழக்கை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க கோரி ரகுபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், தவெக வேட்பாளர் சிந்தாமணி முன்வைத்த குற்றச்சாட்டுகளில் போதுமான அடிப்படை விவரங்கள் இல்லை என்றும், தேர்தல் முடிவு எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்றும் கூறி மனுவை கடந்த செப்டம்பர் 30-ம் தேதி டிஸ்மிஸ் செய்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிந்தாமணி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இம்மேல்முறையீட்டு மனுவை இன்று நீதிபதிகள் பிரசாந்த்குமார், ஸ்ரீசந்திரசேகர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.
