பிரதமர் நரேந்திர மோடி, ”அரசின் தலைவராக” தொடர்ந்து 25 ஆண்டுகள் நிறைவு செய்ததற்கு வாழ்த்து தெரிவித்து மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
குஜராத்தில் மூன்று முறை வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது, அதைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்று மக்களவைத் தேர்தல்களிலும் மோடிக்கு கிடைத்த ஆதரவு ஆகியவை அவர் மீது மக்கள் வைத்துள்ள நீடித்த நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக மத்திய அமைச்சரவையின் நேற்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது செயல்படுத்தப்பட்ட சில திட்டங்கள் பின்னர் தேசிய அளவில் விரிவுபடுத்தப்பட்டதையும் இந்த தீர்மானம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, விவசாயத்திற்குத் தனியாக மின்சாரம் வழங்கும் குஜராத்தின் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, கிராமப்புற மின்சார விநியோகத்தை மேம்படுத்தும் திட்டம் தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் அமைச்சரவை பட்டியலிட்டுள்ளது.
சுமார் 60 கோடி பேருக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டது, 4 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது, 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்பன உள்ளிட்ட விவரங்கள் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு பிரதமர் மோடி அளித்த முக்கியத்துவத்தின் விளைவாக இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சரவை தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
