இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையரை சந்திக்க அனுமதி கோரி அமைதியான முறையில் தர்ணாவில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை டெல்லி போலீசார் தரதரவென இழுத்து குண்டு கட்டாக கைது செய்ததற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே இன்று (அக்டோபர் 6) தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ராகுல் காந்தி அமைதியான முறையில் தேர்தல் ஆணையரை சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக் கொண்டிருந்தார். அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது அவருக்கு அரசியல் சாசனம் வழங்கி இருக்கும் உரிமை.

அப்படி இருந்தும், அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீசார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியை தரதரவென இழுத்து குண்டு கட்டாக தடுத்து வைத்திருப்பது, அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்பாக கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் நடவடிக்கைகளில் மிகுந்த பதற்றம் வெளிப்படுகிறது.

ஜனநாயகத்தில் இறுதி அதிகாரம் மக்களிடம்தான் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு நடவடிக்கைக்கும் மக்களே அனைவரையும் பொறுப்பேற்கச் செய்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு இந்தியா கூட்டணி கட்சிகள் நடத்திய போராட்டம் பல மணி நேரம் நீடித்த நிலையில், ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து கார்கே இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார்.
