2 எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய நெருக்கடி தரப்பட்டதா? ‘குதிரை பேர’ கூட்டு சதியா? துரை வைகோ விளக்கம்

Published On:

| By Mathi

Durai Vaiko-MDMK-DMK

திமுகவில் இணைந்த கடையநல்லூர் எம்.எல்.ஏ. திமு ராஜேந்திரன், சீர்காழி எம்.எல்.ஏ. செந்தில் செல்வன் ஆகியோரை ராஜினாமா செய்ய வைப்பதற்காக தவெக தலைவரும் முதல்வருமான விஜய், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மற்றும் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. ஆகியோர் கூட்டாக சதி செய்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக வழக்கறிஞர் பரந்தாமன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து முதல்வர் சகோதரர் விஜய் மீதும், தலைவர் வைகோ மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, என் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

ADVERTISEMENT

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடும் பரந்தாமன் தேர்தல் நடத்தை விதிகளை மீறி செய்தியாளர்களைச் சந்தித்ததற்கு தேர்தல் ஆணையம் தான் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரை மறுமலர்ச்சி திமுக தலைமை , அழைத்துப் பேசியதாக பரந்தாமன் அதன் முழு பின்னணியையும் , உண்மைகளையும் மறைத்து அவதூறு பரப்பி இருக்கிறார்.

ADVERTISEMENT

மறுமலர்ச்சி திமுக சுமார் 10 ஆண்டு காலமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உறுதியாகப் பயணித்தது. தமிழ்நாட்டில் மதவாத அரசியலுக்கு இடமளித்து விடக்கூடாது என்ற கொள்கை அடிப்படையில்தான் மறுமலர்ச்சி திமுக உள்ளிட்ட கட்சிகள் திமுக தலைமையிலான அணியில் தொடர்ந்தன. தமிழ்நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்பியதால் சகோதரர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு அமோக ஆதரவு வழங்கினார்கள். 108 சட்டமன்ற உறுப்பினர்களுடன் தனிப் பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தது.

அதிக இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பிறகு திரை மறைவில் நடந்த நிகழ்வுகளால் திமுக தலைமையின் நோக்கம் அம்பலமாகி போனது. சகோதரர் விஜய் தலைமையில் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு திமுக ஒரு சதியை அரங்கேற்ற தீவிரமாக முனைந்தது. மக்கள் தீர்ப்பை குழி தோண்டிப் புதைக்க திட்டமிட்டனர்.

ADVERTISEMENT

பாஜகவுடன் இணைந்து கூட்டணியாக தேர்தலை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல்வராக்குவதற்கு திமுக ஆதரவு தருவது என்று திமுகவின் பவர் சென்டர் முடிவெடுத்தது. இந்த தகவலை முதன் முதலில் அகில இந்திய ஊடகங்களுக்கு தந்தவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் தோழர் எம் ஏ பேபி அவர்கள்.அதன் பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் திமுகவின் ரகசிய திட்டத்தை போட்டு உடைத்தனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மைதீன் அவர்கள் திமுகவின் இந்த மோசடி அரசியலை பத்திரிக்கையாளர்களிடம் கொட்டித் தீர்த்தார்.

திமுக பவர் சென்டரின் இந்த அயோக்கியத்தனமான சதித் திட்டத்திற்கு உடன்படாமல் கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறின. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கவும் ஆதரவு நல்கின. தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் மறுமலர்ச்சி திமுகவை திமுக பவர் சென்டர் நடத்திய முறையால் கட்சி நிர்வாகிகள் கடுமையாக அதிருப்தியிலும் வேதனையிலும் இருந்த நிலையில் திமுகவின் ரகசிய திட்டம் மேலும் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் ஆகிவிட்டது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழு, நிர்வாக குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் இனிமேலும் திமுக கூட்டணியில் நீடிக்க கூடாது என்று கொந்தளித்தனர். இதன் பின்னணியில்தான் திமுக கூட்டணியில் இருந்து மறுமலர்ச்சி திமுக வெளியேறுவது என்று முடிவு செய்தது. அது முழுக்க முழுக்க கட்சி எடுத்த முடிவு.

அப்படி இருக்கும்போது சட்டமன்றத்தில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்றுதான் கருத்து பரிமாற்றங்கள் நடந்தன. திமுக தலைமையிலான கூட்டணியில் தேர்தல் உடன்பாடு ஏற்பட்டபோது மறுமலர்ச்சி திமுகவுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், அதில் மூன்று தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டுமெனவும், ஒரு தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவது என்றும் திமுக தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்களும், கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களும் தேர்தல் உடன்பாட்டில் கையெழுத்திட்டு பத்திரிகைகளுக்கு அந்த ஒப்பந்தம் வெளியிடப்பட்டது. அதன் நகலையும் மக்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.

இதன் படி மதுரை தெற்கு, கடையநல்லூர், மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் உதய சூரிய சின்னத்திலும், சீர்காழி (தனி) தொகுதியில் தனிச் சின்னத்திலும் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திமுகவின் பவர் சென்டர் கடுமையான அழுத்தம் கொடுத்து சீர்காழி தொகுதியிலும் உதய சூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று நிர்பந்தம் செய்தனர். இல்லையெனில் கூட்டணி உடன்பாடு முறிந்து விடும் என்றும் மறுமலர்ச்சி திமுக வெளியேற்றப்படும் என்றும் மிரட்டினர்.

இந்த சூழ்நிலையில் வேறு வழியில்லாமல் கடைசி நிமிடத்தில் தேர்தல் கூட்டணியில் மதிமுகவால் பிரச்சனை வந்தது என்று இருக்கக் கூடாது என்பதனால் தலைவர் வைகோ அவர்கள் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டார். கழகத் தொண்டர்களும் நிர்வாகிகளும் கடும் கோபத்தில் திமுகவின் அராஜக போக்கை ஏற்க முடியாமல் எரி மலையாக கனன்று கொண்டிருந்தனர். அவர்களை எல்லாம் நானும் ஆற்றுப்படுத்தினேன்.

கடையநல்லூர், சீர்காழி தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டு வேட்பாளர்களும் மறுமலர்ச்சி திமுகவின் முக்கிய பொறுப்பாளர்களாக இருந்தவர்கள்.

கூட்டணியில் உள்ள ஒரு கட்சியை தங்கள் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று நிர்பந்தம் செய்வது அரசியல் அயோக்கியத்தனம். இதை கூச்சம் இல்லாமல் திமுக செய்தது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை காலில் போட்டு மிதிக்கின்ற செயல்.

ஆனால் திமுக தலைமை தங்கள் பண்ணையார் தனத்தை காட்டி ஆணவமாக நடந்து கொண்டது. இந்தச் சூழ்நிலையில் கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறினால் அவதூறு சேற்றை வாரி வீசுவார்கள்.எனவே எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டுதான் தேர்தலை கழகம் சந்தித்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மறுமலர்ச்சி திமுக சார்பில் களம் கண்ட இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களையும் கள்ளத்தனமாக கவர்ந்து கொண்டு போனது அறிவாலயம். இதில் பாதிக்கப்பட்டது மறுமலர்ச்சி திமுக தான்.

32 ஆண்டுகளாக கட்சிக்காக கண்ணீரும் செந்நீரும் சிந்தி உழைத்த எத்தனையோ பேர் தகுதி உள்ளவர்கள் இருக்கும்போது விலை போன இந்த இருவருக்கும் வாய்ப்பை வழங்கியது மறுமலர்ச்சி திமுக தலைமை.ஆனால் கூச்சமே இல்லாமல் அந்த இருவரும் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் என்று திமுக கூறுவது வெட்கக்கேடானது.

அப்படி எனில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சில கட்சிகளின் தலைவர்களை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் என்று திமுக தலைமை கூற முடியுமா?.

ஜனநாயக மாண்புகளுக்கு எதிராகவும் , அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும்,தேர்தல் ஆணையத்தின் சட்ட விதிமுறைகளை மீறி, தங்கள் சின்னத்தில் கூட்டணி கட்சிகளைப் போட்டியிட நிர்பந்தம் செய்த திமுகவும் அதன் பவர் சென்டரும் நீதிமன்றத்தின் குற்றக் கூண்டில் விரைவில் நிறுத்தப்படுவார்கள்.லஞ்ச ஊழலின் ஊற்றுக்கண்ணாக பல்லாயிரக்கணக்கான கோடிகளை குவித்துக் கொண்டிருக்கின்ற இவர்கள் மறுமலர்ச்சி திமுக மீதும் நேர்மையான லஞ்ச ஊழலற்ற நிர்வாகத்தை நடத்துகின்ற முதல்வர் விஜய் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுப்பது கேலிக்கு உரியது.

தமிழ்நாட்டு மக்கள் எல்லாவற்றையும் கூர்ந்து நோக்கி கொண்டிருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் எடை போட்டு பார்ப்பார்கள். தக்க பாடத்தையும் புகட்டுவார்கள். தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த ஜனநாயகப் புரட்சி ஊழல்வாதிகளை, பொய்யும் புரட்டும் களவும் அணிகலனாக கொண்டிருக்கின்ற அரசியல்வாதிகளை அரசியல் அரங்கத்தில் இருந்து முற்றாக அப்புறப்படுத்தும். காலக் கண்ணாடி அதைக் காட்டத்தான் போகிறது. இவ்வாறு துரை வைகோ தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share