தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய உத்திரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பேசிய நிதி அமைச்சர் மரிய வில்சன், கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறையில் சில இடங்களில் கட்டாயப்படுத்தி தான் பணம் வாங்கி இருக்கிறார்கள். அதில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். இதற்கு ஆதாரம் கேட்கிறார்கள்.
எந்த இடத்தில் எந்த நேரத்தில் எவ்வளவு வாங்கினார்கள்… சிறுபான்மை கல்வி நிறுவனத்திற்கு எவ்வளவு வாங்கினார்கள் என்றெல்லாம் என்னால் சொல்ல முடியும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் மரிய வில்சனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்யக்கோரி வழக்கறிஞர் சிவசுப்பிரமணியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் லஞ்சம் வாங்குவது மட்டுமல்ல கொடுப்பதும் குற்றம் என்பதால் லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக்கோரி லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி புகார் அளித்தேன்.
சட்டமன்றத்தில் அமைச்சர் அளித்த இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை வெறும் அரசியல் பேச்சாக புறந்தள்ளி விட முடியாது.
எனது புகாரின் அடிப்படையில் அமைச்சர் மரிய வில்சன் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனு விரைவில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
