தமிழக சட்டசபை தேர்தலில் முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெற்றி பெறுவதற்கு காரணமே இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் (SIR)தான் என்று தவெக அமைச்சரவையில் பங்கேற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. குற்றம்சாட்டி உள்ளார்.
டெல்லியில் சன் நியூஸ் சேனலுக்கு இன்று (அக்டோபர் 6) தொல். திருமாவளவன் அளித்த பேட்டி
கேள்வி: சுதந்திர இந்தியாவில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக நடைபெறும் ஒரு முதல் போராட்டம். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
திருமாவளவன்: இது வெகுமக்கள் புரட்சியாக மாறும் என்று நம்புகிறேன்.
ஒரு குறிப்பிட்ட அரசியல் அணி மட்டுமே இதை எதிர்க்கவில்லை. எதிர்க்கட்சிகள் மட்டுமே எதிர்க்கவில்லை. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும் தலைமைத் தேர்தல் ஆணையர், பாஜக, ஆர்எஸ்எஸ் சதித் திட்டத்திற்கு துணைபோன செயலை கடுமையாக கண்டிக்கிறார்கள், எச்சரிக்கிறார்கள்.
ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். இந்த அறப்போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில்தான் இன்றைக்கு பாராளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையம் வரையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேரணி மற்றும் முற்றுகைப் போராட்டம் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கேள்வி: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரை வைத்து பிரதமரும் உள்துறை அமைச்சரும் ஏன் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்?
திருமாவளவன்: பிரதமரும் உள்துறை அமைச்சரும் இரண்டு தனிநபர்களாக இருந்து இதனை செய்யவில்லை. பாஜகவும் ஆர்எஸ்எஸும் இணைந்து அவர்களின் அரசியல் நிலைப்பாட்டை நடைமுறைப்படுத்துகிறார்கள். அவர்கள் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும்.
குறிப்பாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் போன்ற தேசிய கட்சிகள் இங்கே இருக்கக் கூடாது. ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்கிற முறையைக் கொண்டுவர வேண்டும் என்பதற்கு ஏற்ப அவர்கள் செயல்திட்டங்களை வகுத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே இது மோடி, அமித்ஷாவின் கூட்டுச் சதி என்று மட்டும் நாம் சுருக்கிவிட முடியாது. ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார்களின் சதித் திட்டம், செயல்திட்டம். இதை நடைமுறைப்படுத்துவதற்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் முழுமையான ஒத்துழைப்பை நல்கியிருக்கிறார். அவர் செய்திருப்பது ஜனநாயக விரோதம் மட்டுமல்ல, தேச விரோதமாகும். ஆகவே அவரை அப்பதவியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. இந்த நிலையில்தான் அவர் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கையை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
கேள்வி: ஆட்சிப் பசிதான் இதற்கு முக்கிய காரணம்?
திருமாவளவன்: அவர்களின் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரம் தேவை, ஆட்சி தேவை. அவர்களின் செயல்திட்டம் என்பது ஒரே தேசம், ஒரே கலாச்சாரம்; ஒரே தேசம், ஒரே மதம்; ஒரே தேசம், ஒரே கட்சி; ஒரே ஆட்சி என்ற நடைமுறையைக் கொண்டுவருவதுதான். அதுதான் அவர்களின் பசி. அதை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்ந்து அவர்கள் அதிகாரத்தில் இருக்க வேண்டும்.
ஆட்சி அதிகாரத்தில் இருந்தால்தான் இந்த அரசமைப்புச் சட்டத்தை தூக்கி எறிய முடியும். எனவேதான் அவர்கள் தேர்தல் ஆணையத்தை தவறாக பயன்படுத்தியிருக்கிறார்கள். இதனை அவர்களோடு பணியாற்றக்கூடிய பிற தேர்தல் ஆணையர்களே அம்பலப்படுத்தியிருக்கிறார்கள் என்பதுதான் குறிப்பிடத்தக்கதாகும்.
கேள்வி: SIR-க்கு பிறகு நடத்தப்பட்ட தேர்தல்கள் அனைத்துமே ரத்து செய்யப்பட வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைக்கப்படுகிறது. இதை திருமாவளவன் எப்படி பார்க்கிறார்?
திருமாவளவன்: கடந்த காலங்களிலேயே SIR என்கிற நடைமுறை இருந்திருக்கிறது. நாம் அதை மறுக்க முடியாது. ஆனால் கடந்த சில பத்தாண்டுகளாக அது நடைமுறையில் இல்லை. இப்போது அதை நடைமுறைப்படுத்துகிறோம் என்கிற பெயரில் பாஜகவுக்கு எதிரான வாக்கு வங்கிகளை மதரீதியாகவும், சாதிரீதியாகவும் அடையாளம் கண்டு, அவற்றை கொத்துக் கொத்தாக நீக்கியிருக்கிறார்கள்.
ஆகவே சிறுபான்மை சமூகத்தினரின் வாக்குகளையும், தலித் மக்களின் வாக்குகளையும், எங்கெல்லாம் பாஜக வெற்றி பெற முடியாதோ அந்த இடங்களிலெல்லாம் நீக்கியிருக்கிறார்கள். பாஜக வெற்றி பெறுவதற்கு வழிவகுத்திருக்கிறார்கள்.
அதன்படிதான் பல மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு வந்திருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிவைத்து, திட்டமிட்டு பல எதிர்க்கட்சித் தலைவர்களை இவர்கள் தோற்கடிக்கிற வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதற்கு SIR-ஐ பயன்படுத்தியிருக்கிறார்கள்.
கேள்வி: தமிழ்நாட்டிலும், ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்ட இடங்களில்தான் தவெக வெற்றி பெற்றிருக்கிறது அப்படின்ற ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது?
திருமாவளவன்: இந்த குற்றச்சாட்டை அனைத்து தரப்பிலுள்ள ஜனநாயக சக்திகள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். தேர்தல் முடிவுகளுக்கு முன்பே இது பற்றி பேசப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பிலும் இதே கருத்தை நாங்கள் வலியுறுத்தியிருக்கிறோம்.
அதாவது SIR மும்முனைப் போட்டியை உருவாக்கியிருக்கிறது. இல்லையென்றால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இருமுனைப் போட்டியாகத்தான் இருந்திருக்கும். மும்முனைப் போட்டியை உருவாக்குவதற்கு SIR பயன்படுத்தியிருக்கிறது. அதனால்தான் இந்த தேர்தல் முடிவுகள் வந்திருக்கின்றன என்பதை நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.
கேள்வி: SIR கொண்டுவரப்பட்டதன் மூலமாகத்தான் தவெக வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கிறது என்பது உங்களுடைய கருத்தா?
திருமாவளவன்: பல மாநிலங்களில் இந்த நிலை இருப்பதால், தமிழ்நாட்டிலும் இது இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை தேர்தல் முடிவு வந்த காலத்தில் நான் சொல்லியிருக்கிறேன். அந்த கருத்து இப்போதும் பேசப்பட்டு வருகிறது. இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.
