செவிலியர்கள் போராட்டம்: தாய்மாமன் தடியடி திட்டமா? – தவெக அரசுக்கு உதயநிதி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

பணி நிரந்தரம் – சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை மட்டுமின்றி குழந்தைகள் மீது கூட தாக்குதல் நடத்துவது வெட்கக்கேடு என உதயநிதிஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. செவிலியர்கள் மீதான அடக்குமுறைக்கு உதயநிதி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

தாய்மாமன் தடியடி திட்டமா?

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், பணி நிரந்தரம் – சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் செவிலியர்கள் மீது காவல்துறையினரை ஏவி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த Dummy CM-ன் அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

எதிர்க்கட்சியாக இருந்த போது, ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று சொன்ன இன்றைய கோமாளி ஆட்சியாளர்கள், இன்றைக்கு செவிலியர் போராட்டத்திற்கு முதல் ஆளாக காவல்துறையை அனுப்பி அராஜகம் செய்கின்றனர்.

ADVERTISEMENT

ஒருபக்கம், போராட்டக்களத்தில் சிறிய இடத்தில் செவிலியர்களை அடைப்பது – மின்சாரத்தை நிறுத்துவது – உயிர் வேணுமா வேண்டாமா என்று மிரட்டுவது என அத்துமீறும் இந்த ஆட்சியாளர்கள் – மறுப்பக்கம், Abusive Warriors மூலம் செவிலியர்களையும் – அவர்களின் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவது அநாகரிகத்தின் உச்சம்.

செவிலியர்கள் மீது சிறு கீறல் விழுந்தாலும் பொறுக்க மாட்டோம் என அன்றைக்கு punch dialog பேசிவிட்டு, இன்றைக்கு போராடும் செவிலியர்களை மட்டுமின்றி அவர்களின் குழந்தைகள் மீது கூட தாக்குதல் நடத்துவது வெட்கக்கேடு.

ADVERTISEMENT

குழந்தைகளைத் தாக்குவதற்கு பெயர் என்ன தாய்மாமன் தடியடி திட்டமா?

பெட்டி வேட்பாளரின் போலிக் கண்ணீரை துடைப்பதற்காக நீளும் முதல்வரின் கரங்கள், உயிர்காக்கும் செவிலியர்களின் உண்மைக் கண்ணீரைத் துடைக்க மறுப்பது ஏன்?

செவிலியர்கள் மீதான அடக்குமுறையை உடனே நிறுத்தி, அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகளைத் தீர்த்து வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது நீதியல்ல

இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பதிவில், “பணிப்பாதுகாப்பு, ஊதிய உயர்வு கோரி போராடிய செவிலியர்களை கைது செய்வதா? ஒரு மாதத்தில்
கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்!

சென்னை எழும்பூரில் ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட 20 கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாநிலை போராட்டம் நடத்திய தமிழ்நாடு இடைநிலை சுகாதார பணியாளர்கள் மீது காவல்துறையினர் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு, கைது செய்திருக்கின்றனர். உரிமைகளுக்காக அறவழியில் போராடிய செவிலியர்களை காவல்துறை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

இடைநிலை சுகாதார பணியாளர்களான செவிலியர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் தான் வழங்கப்படுகிறது. பணி நிலைப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக அவர்கள் பணியாற்றி வரும் போதிலும் அவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை.

ஆட்சிக்கு வந்தால் அனைத்து துறைகளிலும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்குவோம் என்று தவெக வாக்குறுதி அளித்திருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி தான் செவிலியர்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது நீதியல்ல.

செவிலியர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் உறுதியளித்ததைத் தொடர்ந்து நவம்பர் 3-ஆம் தேதி வரை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக செவிலியர்கள் அறிவித்துள்ளனர். அதற்குள்ளாக அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்; அவர்கள் மீண்டும் ஒருமுறை போராட்டம் நடத்தும் நிலையை அரசு ஏற்படுத்திவிடக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜோசப் விஜய் வில்லனா?

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பதிவில், “நியாயமான அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் வலுக்கட்டாயமாகக் கைது – பேச்சுவார்த்தை எனும் பெயரில் அழைத்துச் சென்று செவிலியர்களைக் கைது செய்து மண்டபத்தில் அடைத்திருப்பது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்.

பணிப் பாதுகாப்பு, பணி நிரந்தரம், சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்கள் நேற்று இரவோடு இரவாக காவல்துறையினரால் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தங்களின் உரிமைகளுக்காகப் நியாயமான முறையில் போராடி வரும் செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய தவெக அரசு, காவல்துறையை ஏவல்துறையாக மாற்றி, போராட்டக் களத்தில் மின்சாரத்தைத் துண்டித்தும், பந்தல்களை அகற்றியும், போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுக்குக் காயம் ஏற்படும் அளவிற்கு அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றும் அராஜகப் போக்கில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

முறையான முன் அனுமதி பெற்று அமைதியான முறையில் போராடிக் கொண்டிருந்த செவிலியர்களின் பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தை எனும் பெயரில் அழைத்துச் சென்று, அவர்களைக் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தது செவிலியர்களுக்கு தவெக அரசு இழைத்திருக்கும் மாபெரும் துரோகமாகும்.

தேர்தலுக்கு முன்பு போராட்டக் களத்திற்குச் சென்று ஆதரவு தெரிவித்து, தங்களது தேர்தல் அறிக்கையில் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது ஆட்சிக்கு வந்ததும் அதே கோரிக்கையை முன்வைத்துப் போராடி வரும் செவிலியர்களைக் காவல்துறையை வைத்து அடக்கி ஒடுக்குவதும், போராட்டக் களத்தில் இருந்த செவிலியர்களைப் பார்த்து காவலர் ஒருவரே, “வேண்டாம், உங்க உயிர் முக்கியம்” என மிரட்டுவதும், சினிமாவில் தான் ஹீரோ; நிஜத்தில் தான் ஒரு வில்லன் என்பதை முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் தெரிவிக்க முற்படுகிறாரா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

எனவே, கொரோனா போன்ற பெருந்தொற்றுக் காலத்தில் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் உயிரைக் காக்க முன்களத்தில் நின்று பணியாற்றிய செவிலியர்களின் பணிப் பாதுகாப்பு, பணி நிரந்தரம், சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளைப் பேச்சுவார்த்தையின் மூலம் நிறைவேற்றிட முன்வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share