மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகிய இருவரும் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தவெகவில் இணைந்தனர். இதனால் இவ்விரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தனித் தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பாணையைக் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் 16-ஆம் தேதி நிறைவடைந்தது. இந்தத் தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்டுகள் என 5 முனைப் போட்டி நிலவுகிறது.
இந்த இடைத்தேர்தலில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி. சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் மற்றும் சுயேச்சைகள் உட்பட 27 பேர் களத்தில் உள்ளனர்.
அதேபோல், தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் மற்றும் சுயேச்சைகள் உட்பட 22 பேர் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தாராபுரம் தொகுதியில் காலை 9:00 மணியளவில் 17.55% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் 11 மணி நிலவரப்படி 37.28% வாக்குகள் பதிவாகி உள்ளது.
அதேபோல், மதுராந்தகம் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 15.99% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் தற்போது 11 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 35.55 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது.
கடந்த 2026 பொதுத்தேர்தலில் தாராபுரத்தில் 11 மணி நிலவரப்படி 40.89% வாக்குகளும், மதுராந்தகத்தில் 37.28 சதவிகித வாக்குகளும் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.
