இன்று (அக்டோபர் 6) தாராபுரம், மதுராந்தகத்தில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதில் தாராபுரம் இடைத்தேர்தல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய் கொண்டிருக்கிறது.
காலையில் தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமா பேசியதாக வெளியான வீடியோ தொடங்கி, கொளிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் மூதாட்டியிடம் விசில் சின்னத்துக்கு ஓட்டுப்போட தேர்தல் அலுவலர் வற்புறுத்தியதாக கூறப்படுவது வரை பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.
இந்தநிலையில் தலைமைச் செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரியைச் சந்தித்து தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமா மீது திமுக எம்.எல்.ஏ.ஆஸ்டின் புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றி கழக வேட்பாளர் சத்யபாமா வீடியோவில், பேசியதை எல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
இந்த தேர்தலில், பிரச்சாரத்திற்காக வருகை தந்த அமைச்சர்களுக்கும், கட்சி முக்கியஸ்தர்களுக்காகவும் ‘மல்லி ரிசார்ட்’ என்ற ஹோட்டலில் அறை ஒதுக்குவதற்காக கிட்டத்தட்ட 14 லட்சம் ரூபாய் செலவு செய்ததாக கூறியிருக்கிறார்.
அதோட மேலும் பல தொகைகளை செலவு செய்ததாக அந்த வீடியோவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ல் , பிரிவு 77 தெளிவாகச் சொல்கிறது. ஒரு வேட்பாளர் தேர்தல் செலவுக்காக 40 லட்சம் ரூபாய் தான் செலவு செய்ய வேண்டும்.
வேட்பாளர், தேர்தலுக்காகும் செலவை கணக்கு காட்ட வேண்டும்.
தனியாக இதற்கென ரெஜிஸ்டர் போட்டு இருக்கிறார்கள். இந்த ரிஜிஸ்டரில் தேர்தல் கணக்கை பதிவு செய்து அப்சர்வராக வரக்கூடியவர்கள் அதற்கு ஒப்புதல் அளித்து ரிட்டர்னிங் ஆபீஸரிடம் வழங்க வேண்டும்.
இதிலும் பணமாக எதுவும் செலவு செய்யக்கூடாது. வேட்பாளருக்கு என தனி ஒரு கரண்ட் வங்கி கணக்கு உருவாக்கப்பட்டு அதன் மூலம் காசோலையாகத்தான் கொடுக்க வேண்டும்.
தேர்தல் செலவு மேற்பார்வை செய்யக்கூடிய அதிகாரியிடம் காசோலையை ஒப்படைத்து ரிஜிஸ்டரில் பதிவு செய்ய வேண்டும். அதில் வேட்பாளர் கையெழுத்திட வேண்டும் அல்லது அவரது முதன்மை முகவர் கையெழுத்திட வேண்டும்.
ஆனால் இன்று அறை ஒதுக்கீடு செய்வதற்கு மட்டும் 14 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறேன் என்று சத்யபாமா கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக நாங்கள் தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் கொடுத்திருக்கிறோம்..
அதில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொண்டு, இந்த தேர்தல் கணக்கில் 14 லட்சம் ரூபாய் கணக்கு காட்டப்பட்டிருக்கிறதா. அந்த ரிஜிஸ்டரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா. அதில் வேட்பாளரோ அல்லது அவரது முகவரோ கையெழுத்து போட்டிருக்கிறார்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
அதுமட்டுமின்றி அந்த வங்கி கணக்கின் ஸ்டேட்மென்ட்டை எடுக்க சொல்லி, அதில் இந்த பணம் ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டு இருக்கிறதா… யாருக்காவது காசோலையாக கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்க்க சொல்லி இருக்கிறோம்.
எனவே இந்த வங்கி கணக்கில் வரவில்லை என்றாலும், தேர்தல் கணக்கு ரிஜிஸ்டரில் பதிவாகவில்லை என்றாலும் உடனடியாக சத்யபாமா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
விதிப்படி, குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஒரு வேட்பாளர் செலவு செய்திருக்கிறார் என்று சொன்னால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
மூன்று ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது. அதிகபட்சமாக ஆறு மாதங்கள் சிறை தண்டனையும் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் இந்திய தண்டனைச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
எனவே 14 லட்சம் ரூபாய் செலவு செய்து இருக்கிறேன் என்று வாக்குமூலமாக சொல்லி இருப்பதை வைத்து, ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம்” என்றார்.
அது சித்தரிக்கப்பட்ட வீடியோ என்று வேட்பாளர் சத்யபாமா கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு,
”அந்த வீடியோவில் பல விஷயங்களை அவர் சொல்லி இருக்கிறார். அந்த இயக்கத்தை பற்றியும் மோசமாக குறிப்பிட்டிருக்கிறார். இப்படி வீடியோ வெளிவந்ததும் நான் தான் அப்படி சொன்னேன் என்று எந்த வேட்பாளரும் சொல்ல மாட்டார்கள். அது சித்தரிக்கப்பட்ட வீடியோ என்று சொல்வது தவறான வாதம்.
கடந்த தேர்தலில் 31 கோடி ரூபாய் செலவு செய்தேன் என்றும் எடப்பாடி பழனிசாமி ஒரு பைசா கூட தரவில்லை என்றும் சொல்லி இருக்கிறார். இதுவே மிகப்பெரிய குற்றச்சாட்டு. இதன் அடிப்படையிலேயே அவர் இந்த இடைத்தேர்தலில் நிற்க முடியாது. அவர் ராஜினாமா கூட செய்திருக்க வேண்டியது இல்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். எனவே அதை அன்றைக்கு விட்டு விட்டார்கள். இன்று புகார்கள் கொடுத்திருக்கிறோம்” என்று பதிலளித்தார்.
