VIDEO: டெல்லியில் 9 மணி நேர போராட்டம்… ராகுல் காந்தியை தரதரவென இழுத்து சென்று கைது செய்த போலீஸ்!

Published On:

| By Mathi

Rahul Gandhi-Delhi-Arrest

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் இன்று (அக்டோபர் 6) ‘இந்தியா’ கூட்டணி நடத்திய போராட்டம் பல மணி நேரமாக நீடித்தது. போலீஸ் தடுப்புகள் மீது ஏறி தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்த ராகுல் காந்தி, பின்னர் ஆகாஷ்வாணி பவன் வளாகத்தில் பிரியங்கா காந்தியுடன் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தார். 9 மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்தைத் தொடர்ந்து ராகுல் காந்தி உள்ளிட்டோரை போலீசார் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்ததால் பதற்றம் ஏற்பட்டது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டி வரும் எதிர்க்கட்சிகள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தின் தலைமையகமான நிர்வாசன் சதன் நோக்கி ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் பேரணியாக புறப்பட்டனர்.

ADVERTISEMENT

மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், அபிஷேக் பானர்ஜி, டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். ஆனால் நிதி ஆயோக் அலுவலகம் மற்றும் ஆகாஷ்வாணி பவன் அருகே போலீசார் தடுப்புகளை அமைத்து பேரணியை தடுத்து நிறுத்தினர்.

இதனால் போலீசாருக்கும் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் அமைத்திருந்த தடுப்புகள் மீது ஏறிய ராகுல் காந்தி, தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்தார். அவரைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜியும் தடுப்பு மீது ஏறினார். சமாஜ்வாதி கட்சியினரும் அந்த தடுப்புகள் மீது ஏறி முழக்கங்களை எழுப்பினர்.

ADVERTISEMENT

போராட்டத்தில் ஈடுபட்ட அகிலேஷ் யாதவ், அபிஷேக் பானர்ஜி, டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்களை போலீசார் தடுத்து வைத்து பேருந்துகளில் அழைத்துச் சென்றனர். பிரியங்கா காந்தியும் தடுத்து வைக்கப்பட்டார்.

ஆனால் இதோடு போராட்டம் முடிவுக்கு வரவில்லை. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஆகாஷ்வாணி பவன் வளாகத்துக்குள் நுழைந்தனர். அங்குள்ள மரத்தின் கீழ் அமர்ந்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். வளாகத்தை விட்டு வெளியேறும்படி போலீசார் கேட்டபோதும், தேர்தல் ஆணையத்தை சந்திக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.

ADVERTISEMENT

“சுமார் 300 எம்.பி.க்கள் வந்திருக்கிறோம். தேர்தல் ஆணையர்கள் எங்களை ஏன் சந்திக்கவில்லை? நாங்கள் மக்களின் பிரதிநிதிகள். எங்களை ஏன் தடுக்கிறார்கள்?” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

இதனிடையே, எதிர்க்கட்சிகளிடம் இருந்து சந்திப்புக்கான முறையான கோரிக்கை எதுவும் வரவில்லை என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

இன்று பிற்பகல் தொடங்கிய இந்த போராட்டம் மாலையைக் கடந்தும் தொடர்ந்தது. 8 மணி நேரத்தைக் கடந்த நிலையிலும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஆகாஷ்வாணி பவன் பகுதியில் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்தனர்.

தலைமைத் தேர்தல் ஆணையரை சந்திக்கும் வரை போராட்டம் தொடரும் என ராகுல் காந்தி தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த போலீசார், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முயன்றனர். அப்போது ராகுல் காந்தி உள்ளிட்டோரை தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share