SIR: தமிழ்நாடு ஏன் சைலண்ட்டா இருக்கு? மக்களே தெருவுக்கு வாங்க… போராடுங்க – பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

Published On:

| By Mathi

SIR-Prakash Raj

SIR நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாட்டில் வலுவான மக்கள் போராட்டம் எழாதது ஏன் என நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். இடஒதுக்கீடு, நீட், தொகுதி மறுவரையறை போன்ற விவகாரங்களில் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக போராடிய தமிழ்நாடு, SIR விவகாரத்தில் ஏன் அமைதியாக இருக்கிறது என கேள்வி எழுப்பிய அவர், “மக்கள் தெருவுக்கு வந்து போராடினால்தான் இதைத் தடுக்க முடியும்” என்று வலியுறுத்தினார்.

சென்னையில் இன்று (அக்டோபர் 6) செய்தியாளர்களிடம் நடிகர் பிரகாஷ் கூறியதாவது: SIR மூலமாக எந்தக் கட்சி வெற்றி பெறுகிறது, எந்தக் கட்சி தோல்வி அடைகிறது என்ற கோணத்தில் நான் பார்க்கவில்லை. வாக்களிப்பது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள உரிமை. அந்த உரிமையின் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்துதான் பேசுகிறேன்.

ADVERTISEMENT

6 மாதங்களுக்குள் SIR ஏன்?

தேர்தல் ஆணையம் தொடர்ந்து வாக்காளர் பட்டியலை புதுப்பித்து வருகிறது. அப்படி புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட சில மாதங்களிலேயே மீண்டும் SIR நடத்த வேண்டிய அவசியம் என்ன?

குறுகிய காலத்திற்குள் கோடிக்கணக்கான வாக்காளர்களின் விவரங்களை எப்படி சரிபார்க்க முடியும்? SIR குறித்து பொதுமக்களுக்கும், இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படும் BLO-க்களுக்கும் போதுமான விழிப்புணர்வும் பயிற்சியும் வழங்கப்படவில்லை.

ADVERTISEMENT

ஒருவர் வீட்டில் இல்லை என்றால் அவர் வேலைக்குச் சென்றிருக்கலாம். மருத்துவமனைக்குச் சென்றிருக்கலாம். ஒருவர் வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்திருக்கலாம். அதற்காக அவரது வாக்குரிமையை நீக்கிவிட முடியுமா? SIR என்பது வாக்காளர்களை சேர்ப்பதற்கான பணியா அல்லது நீக்குவதற்கான பணியா?

இவை எண்கள் அல்ல… மனிதர்கள்!

13 கோடியோ, 75 லட்சமோ, ஒரு கோடியோ வெறும் எண்கள் அல்ல. அவர்கள் இந்த நாட்டின் குடிமக்கள். நாம் எண்களைப் பற்றிப் பேசவில்லை; மனிதர்களைப் பற்றிப் பேசுகிறோம்.

ADVERTISEMENT

மேற்கு வங்கத்தில் SIR நடவடிக்கையின்போது லட்சக்கணக்கான வாக்காளர்கள் தவறாக நீக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் தங்களுடைய வாக்குரிமைக்காக நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் 100 பூத்களில் ஆய்வு

கர்நாடகாவில் SIR தொடர்பாக நானும் சில நண்பர்களும் இணைந்து 100 வாக்குச்சாவடிகளில் ஆய்வு நடத்தினோம். பல ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசிப்பவர்கள் ‘இடம்பெயர்ந்தவர்கள்’ என்றும், உயிருடன் இருப்பவர்கள் ‘இறந்தவர்கள்’ என்றும் குறிப்பிடப்பட்ட சம்பவங்களைக் கண்டறிந்தோம்.

தமிழ்நாடு ஏன் சைலண்ட்டா இருக்கு?

தவெக, திமுக, அதிமுக, பாமக என எந்தக் கட்சியாக இருந்தாலும் உங்களைத் தேர்ந்தெடுத்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். அவர்களுக்காக நீங்கள் களத்தில் இறங்குவீர்களா, இல்லையா? தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.

இடஒதுக்கீடு இருக்கட்டும், நீட் இருக்கட்டும், தொகுதி மறுவரையறை இருக்கட்டும்… மொத்த இந்தியாவுக்கே நாம் யார், நம்முடைய போராட்டம் என்ன என்பதைக் காட்டியது தமிழ்நாடு. அந்த தமிழ்நாடு ஏன் சைலண்ட்டா இருக்கு?

மக்கள் தங்களுடைய வாக்குரிமை பறிபோவதை உணர வேண்டும். இந்தப் போராட்டம் மக்கள் தெருவுக்கு வந்தால் மட்டும்தான் நிற்கும். அந்தக் கோபத்தோடு மக்கள் இறங்கி போராட வேண்டியதாக இருக்கிறது.

ஞானேஷ் குமார் மீது விசாரணை நடத்த வேண்டும்

முதலில் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அத்துடன் விட்டுவிடக் கூடாது; அவர் மீது விசாரணை நடத்த வேண்டும். SIR நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் முறையையும் மாற்ற வேண்டும்.

2023-ம் ஆண்டு முதல் இதுவரை தேர்தல் ஆணையம் என்னென்ன முடிவுகளை எடுத்திருக்கிறது, என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது, அவற்றின் விளைவுகள் என்ன என்பதைக் கண்டறிய, அது தொடர்பான அனைத்து கோப்புகளையும் உச்ச நீதிமன்றம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு பிரகாஷ் ராஜ் கூறினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share