மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் 240 எம்.பி.க்கள் தேர்தல் ஆணையர்களை சந்திக்க விரும்பியதாகவும், இவ்வளவு பெரிய குழுவுடனான சந்திப்பு வழக்கமான நடைமுறைக்கு மாறானது என்பதால் அதனை ஏற்க முடியவில்லை என்றும் இந்திய தேர்தல் ஆணையம் இன்று (அக்டோபர் 6) விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இன்று தேர்தல் ஆணையத்தை நோக்கி சில அரசியல் கட்சியினர் பேரணியாக வந்தபோது, சில எம்.பி.க்கள் தங்களது பிரதிநிதிகள் குழுவுடன் தேர்தல் ஆணையத்தை சந்திக்க விரும்புவதாக ஊடகங்கள் மூலம் தெரியவந்தது. ஆனால், இன்று மாலை 4 மணி வரை எந்த அரசியல் கட்சியும் அதன் பிரதிநிதிகள் மூலம் தேர்தல் ஆணையத்தை சந்திப்பதற்காக முன்கூட்டியே நேரம் கேட்கவில்லை.
அதன்பின்னர் மாலை 4 மணியளவில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான எம்.பி.க்கள் குழு தேர்தல் ஆணையத்தை சந்தித்து மனு அளிக்க விரும்புவதாக டெல்லி போலீசாரிடம் இருந்து தகவல் வந்தது.
2025-ல் உருவாக்கப்பட்ட நடைமுறை
அரசியல் கட்சிகளுடனான சந்திப்புகளுக்காக 2025-ம் ஆண்டு தேர்தல் ஆணையம் ஒரு நடைமுறையை உருவாக்கியது. இதுபற்றி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் அல்லது பல்வேறு அரசியல் கட்சிகளின் கூட்டுப் பிரதிநிதிகள் தேர்தல் ஆணையத்தை சந்திக்க விரும்பினால், அந்தக் கட்சிகளால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாக முன்கூட்டியே நேரம் கேட்க வேண்டும். அதன்பின்னர் இருதரப்புக்கும் ஏற்ற நேரத்தில் சந்திப்பு நடத்தப்படும்.
ராகுலுடன் 240 எம்.பி.க்கள்
இந்த நிலையில், மாலை 4 மணிக்குப் பிறகு ராகுல் காந்தி தலைமையிலான எம்.பி.க்களின் சந்திப்பு கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது. அப்போது, ராகுல் காந்தி தலைமையில் 240 எம்.பி.க்கள் கொண்ட குழு சந்திக்க விரும்புவதாகவும், இந்த சந்திப்பை நாடாளுமன்ற இணைப்புக் கட்டடத்தில் நடத்த வேண்டும் என்றும் டெல்லி போலீஸ் துணை ஆணையர் மூலம் தகவல் கிடைத்தது.
ஆனால், அரசியல் கட்சிகளுடனான இதுபோன்ற சந்திப்புகள் தேர்தல் ஆணையத்தின் அலுவலக வளாகத்தில்தான் நடத்தப்படுவது நடைமுறை. எனவே, 240 எம்.பி.க்களுடன் நாடாளுமன்ற இணைப்புக் கட்டடத்தில் சந்திப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வழக்கத்திற்கு மாறானது என்பதால் ஏற்கப்படவில்லை.
இதையடுத்து, 240 எம்.பி.க்களையும் சந்திக்க முடியாத நிலையில், அவர்கள் அளிக்க விரும்பிய மனுவைப் பெற்றுக் கொள்வதற்காக பணியில் இருந்த தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரியை நாடாளுமன்ற இணைப்புக் கட்டடத்திற்கே அனுப்புவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.
அப்படி ஒரு அதிகாரியை அனுப்புவது தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கையாக இருந்திருக்கும். ஆனால், இந்த வாய்ப்பையும் எம்.பி.க்கள் ஏற்கவில்லை.
நாடாளுமன்ற மற்றும் ஜனநாயக நடைமுறைகளையும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் மற்றும் மரபுகளையும் மதிக்கிறோம். எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், எந்த நேரத்திலும் தேர்தல் ஆணையத்தை சந்திப்பதற்காக நேரம் கேட்கலாம். அவ்வாறு கோரிக்கை வந்தால், நேர வசதியைப் பொறுத்து சந்திப்புக்கான தேதி மற்றும் நேரம் ஒதுக்கப்படும். இது வழக்கமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
