கோவை அரசு மருத்துவமனையில் ஹிந்தி திணிப்பா.. தவெக திமுக இடையே முற்றும் சர்ச்சை

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவை அரசு மருத்துவமனையில் மாத்திரைகள் போட்டுத் தரும் பிரவுன் நிற கவரின் முன்பகுதியில், தமிழ், ஆங்கிலத்துடன் இந்தியிலும் அச்சிடப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு மருத்துவமனைகளில் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்துள்ளது போல!

முதலில் கரூர்…
இப்போது கோவையிலும் அதே நிலைமை…” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ADVERTISEMENT

இதற்குப் பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதைத் தொடர்ந்து பழைய கவர்களில் மாத்திரை வழங்க வேண்டாமென நேற்று இரவு மருந்தாளுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இது குறித்து அரசு இருப்பிட மருத்துவ அலுவலர் சரவணபிரியா, தமிழ், ஆங்கிலத்தில் மட்டும் குறிப்புகள் இடம்பெறும் வகையிலான புதிய கவர்களில் நாளை முதல் மாத்திரைகள் வழங்கப்படும் என்றார்.

இந்நிலையில் இன்று காலை முதல் கோவை அரசு மருத்துவமனையில் மீண்டும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட கவர் வழங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் தவெக ஐடி விங் தனது எக்ஸ் பதிவில், “கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை கவரில் இந்தியுடன் மும்மொழி இடம்பெற்றதாகத் தீயசக்திக் கூட்டம் கொதித்துக் குதித்துக் கூப்பாடு போடுகிறது. நம் வெற்றித் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இயங்கும் மனசாட்சியுள்ள மக்களாட்சி இப்படி ஒரு மும்மொழி மோசடியை ஒருநாளும் செய்யாது. மொழிக்கொள்கையைப் பொறுத்தவரை அண்ணாவின் இருமொழிக் கொள்கையே நம் த.வெ.க. அரசின் சமரசமற்ற ஒரே நிலைப்பாடு.

உண்மை என்னவெனில், வெற்று விளம்பர மாடல் தி.மு.க. ஆட்சியில்தான் கடந்த 2025 டிசம்பர் மாதம் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பாக வழங்கப்பட்ட ஆணை மூலம் ஈரோடு கூட்டுறவுச் சங்க அச்சகத்தில் அச்சடிக்கப்பட்ட மாத்திரை கவரில்தான் இந்தியும் இடம்பெற்றுள்ளது. அதை மூடிமறைத்து, தாய்மொழி காப்பதுபோல முகமூடி வேடம் போட்டுத் தீயசக்தி தி.மு.க. மொழிகாக்கும் மூலசக்திபோல குதித்து நாடகமாடுகிறது. இந்த உண்மையை, சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரே தெளிவுபடுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

1996-இல் ஆட்சி அமைத்த தீயசக்தி தி.மு.க., அப்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு இந்தியிலும் ஆங்கிலத்திலும் இருக்கும்படியான இந்திய அரசியல் சாசனப் புத்தகம் தந்தது என 2001-இல் ஆட்சிக்கு வந்தபோது, சட்டமன்றத்திலேயே அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் அந்தப் புத்தகத்தையே அவையில் காட்டித் தீயசக்தி தி.மு.க.வின் முகத்திரையைச் சுக்குநூறாகக் கிழித்ததுதான் சட்டமன்றப் பேரவை வரலாறு. அன்றைக்கு தி.மு.க. சார்பாகப் பதிலளித்த மதிப்பிற்குரிய பேராசிரியர் அன்பழகன் அவர்கள் அப்படி நடந்திருந்தால் அது தவறுதான் என்று கூறியதும் சபைக்குறிப்பில் இருப்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ இயலாது.

ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் இந்திக்குப் பக்கவாத்தியம் வாசித்துவிட்டு, ஆட்சி பறிபோனதும் மண், மொழி, இனம், மானம் காக்கும் உத்தமர்போல வேடம் போட்டுக் குதிப்பதும், பின்னர் குட்டு உடைந்து குப்புற விழுந்து மூக்குடைபடுவதும் வாடிக்கை என்பதுதான் தீயசக்தி தி.மு.க.வின் வரலாறு” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share