தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், வாக்குச்சாவடிக்குள் வாக்களிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக விஜய்யின் தவெக தொண்டர் ஒருவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தாராபுரம் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று (அக்டோபர் 6) நடைபெற்றது. இந்த நிலையில், @KodeeswaRaja_ என்ற எக்ஸ் பதிவில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில், வாக்குச்சாவடிக்குள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் ‘விசில்’ சின்னத்துக்கு எதிரே உள்ள பட்டனை அழுத்துவது பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து VVPAT இயந்திரத்தில் ‘விசில்’ சின்னம் தெரிவதையும் செல்போனில் பதிவு செய்துள்ளார்.
வாக்களித்ததை பதிவு செய்ததுடன், வாக்குச்சாவடிக்குள் தன்னையும் செல்பியாக அந்த நபர் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் முதல்வரும் தவெக தலைவருமான விஜய்யுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் இணைத்து அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
வாக்குப்பதிவின் ரகசியத்தை மீறும் வகையில், வாக்குச்சாவடிக்குள் வாக்களிப்பதை வீடியோ எடுத்து வெளியிட்ட நபர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது எக்ஸ் பதிவிலேயே பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
