இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், அவரது நியமனம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 7) அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி தேர்தல் ஆணையர்களை நியமிப்பது தொடர்பான முக்கியமான தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கியது.
அதில், இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை மத்திய அரசே தேர்வு செய்யும் நடைமுறைக்கு மாற்றாக, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய மூவர் கொண்ட குழு தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நாடாளுமன்றம் இது தொடர்பாக தனியாக சட்டம் கொண்டுவரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்தது.
ஆனால் அதே ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது. அதில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக பிரதமரால் தேர்வு செய்யப்படுகிற மத்திய அமைச்சர் ஒருவர் இடம் பெறுவார் என்றது புதிய சட்டம்.
இதனையடுத்து பிரதமர், பிரதமர் தேர்வு செய்யும் மத்திய அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவர் கொண்ட குழு தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் என்கிற நடைமுறை கொண்டுவரப்பட்டது.
ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு
இந்த புதிய சட்டத்தின்படி, 2025-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
அப்போது இந்த புதிய நியமன முறைக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தார். தனது எதிர்ப்பை எழுத்துப்பூர்வமாகவும் ராகுல் காந்தி பதிவு செய்தார்.
ராகுல் எதிர்ப்பை மீறி ஞானேஷ்குமார் நியமனம்
ஆனால் ராகுல் காந்தியின் எதிர்ப்பையும் மீறி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஞானேஷ்குமார் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். 2023-ம் ஆண்டு புதிய சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட முதல் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்தான்.
மத்திய அரசு சட்டத்துக்கு எதிராக வழக்கு
இதனையடுத்து ஞானேஷ்குமாரை தலைமை தேர்தல் ஆணையராக தேர்வு செய்ய பயன்படுத்தப்பட்ட 2023-ம் ஆண்டு சட்டமே அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் விசாரித்தனர்.
செப்டம்பர் 23-ம் தேதி என்ன நடந்தது?
இந்த விசாரணையின் போது, “வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்ப வேண்டும்” என்று மத்திய அரசு கோரியது. ஆனால் அதனை நீதிபதி தீபங்கர் தத்தா ஏற்கவில்லை.
மேலும், “தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட்டால் மட்டும் போதாது; அது சுதந்திரமாக செயல்படுவதாக மக்களுக்கும் தெரிய வேண்டும்; பிரதமர் தலைமையிலான தேர்வுக் குழுவில், பிரதமரால் தேர்வு செய்யப்படும் மத்திய அமைச்சரும் இடம்பெறுவதால் மத்திய அரசுக்கு பெரும்பான்மை கிடைக்கிறது; இதனால் எதிர்க்கட்சித் தலைவரின் பங்கு பலவீனமாகிறது” என்றார் நீதிபதி தீபங்கர் தத்தா.
அதேநேரத்தில் நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மாறுபட்ட கருத்தை தெரிவித்தார். இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்றார் நீதிபதி சதீஷ் சந்திர சர்மா. இறுதியில் செப்டம்பர் 23-ம் தேதியன்று வழக்கை எந்த அமர்வு விசாரிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக தலைமை நீதிபதியிடம் அனுப்பி இருந்தனர்.
நீதிபதி மகனால் சிக்கல்- புதிய வழக்கு
இந்த நிலையில்தான் இவ்வழக்கில் அதிரடியாக புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 23-ம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான- அதாவது மத்திய அரசின் கோரிக்கையான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை அனுப்ப வேண்டும் என்று கருத்து தெரிவித்த நீதிபதி சதீஷ் சந்திர சர்மாவின் மகன் சித்தார்த் சர்மா, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞராக இருப்பது தெரியவந்தது.
இந்த வழக்கு பல முறை விசாரணைக்கு வந்தபோதும், தனது மகன் தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞராக இருப்பதை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா தெரிவிக்கவில்லை. இதனை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த செப்டம்பர் 23 பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற்று, வழக்கை வேறு அமர்வு விசாரிக்க வேண்டும் என்று புதிய மனுவில் கோரப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் இன்று என்ன நடந்தது?
இந்த நிலையில் செப்டம்பர் 23-ம் தேதி தீர்ப்பை திரும்பப் பெறக் கோரும் இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் இன்று மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் தலைமை நீதிபதி சூர்ய காந்த் முன்பு குறிப்பிட்டார்.
இது செப்டம்பர் 23 தீர்ப்பை திரும்பப் பெறக் கோரும் இடைக்கால மனு என்று அவர் விளக்கினார். மற்றொரு தரப்பினர் ’திருத்த’ மனுவை தாக்கல் செய்திருப்பதையும் தலைமை நீதிபதியிடம் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், “நாங்கள் இதைப் பரிசீலித்துவிட்டு முடிவு எடுப்போம்” என்றார்.
ஞானேஷ்குமார் பதவிக்கு ஆபத்தா?
தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தேர்வு செய்யப்பட்ட நடைமுறைக்கு அடிப்படையாக இருப்பது மத்திய அரசு 2023-ம் ஆண்டு கொண்டு வந்த சட்டம். அந்தச் சட்டம் அரசியல் சாசனப்படி செல்லுபடியாகுமா என்பதுதான் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் முக்கிய கேள்வி. ஞானேஷ்குமார் இந்தச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட முதல் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆவார்.
ஒருவேளை இந்த வழக்கின் இறுதியில் 2023-ம் ஆண்டு சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் ரத்து செய்தால், அந்தச் சட்டத்தின் கீழ் நடைபெற்ற ஞானேஷ்குமாரின் நியமனம் என்னவாகும்? அவரது பதவிக்கு பாதிப்பு ஏற்படுமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. உச்ச நீதிமன்றத்தின் அடுத்தகட்ட விசாரணை மற்றும் இறுதி தீர்ப்பைப் பொறுத்தே இந்தக் கேள்விகளுக்கான விடைகளும் கிடைக்கும்.
