இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தும் அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக, இன்று (அக்டோபர் 7) மல்லிகார்ஜுன கார்கே ஏற்பாடு செய்துள்ள மதிய விருந்தில் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் டெல்லியில் நேற்று பேரணி நடத்தினர். தேர்தல் ஆணையத்தை நோக்கிச் சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பலரை போலீசார் தடுத்து அழைத்துச் சென்றனர்.
இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வதற்காக இன்று (அக்டோபர் 7) ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மதிய விருந்து ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த மதிய விருந்து டெல்லி ஜன்பத்தில் உள்ள சாகர் ரத்னா உணவகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மூத்த வழக்கறிஞரும் எம்.பி.யுமான கபில் சிபல் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் விருந்தில் பங்கேற்றனர். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் எம்.பி.க்களும் பங்கேற்றுள்ளனர்.
எம்.பி.க்கள் சொன்னது என்ன?
இந்த விருந்தில் பங்கேற்க வந்த காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “எங்களை சாப்பிட அழைத்திருக்கிறார்கள். நல்ல உணவை எதிர்பார்த்து வந்திருக்கிறேன்” என்று சிரித்தபடியே தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பி.சந்தோஷ் குமாரிடம் கேட்டபோது, “வியூகம் என்றால் அதை வெளிப்படையாக சொல்ல முடியாது. அதனால்தான் அதை வியூகம் என்கிறோம். பொறுத்திருந்து பாருங்கள். இப்போதைக்கு இது மதிய விருந்துக்கான அழைப்புதான். சாப்பிட்டுக் கொண்டே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவோம்” என்றார்.
மேலும், “FIR எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. அதில் இன்னொரு ‘E’ சேர்த்தால் FIRE ஆகிவிடும். ஒரு FIR பதிவு செய்தால் அது எங்களது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும். அந்த நெருப்பை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது. எங்களது போராட்டத்தைத் தொடருவோம்” என்றார்.
மதிய விருந்துக்குப் பிறகு ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் பேரணி நடத்துவார்களா என்று காங்கிரஸ் எம்.பி. அம்ரிந்தர் சிங் ராஜா வாரிங்கிடம் கேட்டபோது, “நாங்கள் மதிய உணவுக்காக வந்திருக்கிறோம்” என்று மட்டும் பதிலளித்தார்.
இதே கேள்விக்கு ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி. சுதாகர் சிங், “நாங்கள் இங்கே நடந்துதான் வந்தோம். இங்கிருந்து எங்காவது நடந்துதான் செல்வோம். இன்று வாகனங்கள் செல்வதற்கு அரசு எங்கே அனுமதிக்கிறது? எல்லாவற்றையும் தடுத்து வைத்திருக்கிறார்கள். நடந்தே வந்தோம்; நடந்தே செல்வோம்” என்றார்.
‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் மதிய விருந்துக்காக திரண்டதைத் தொடர்ந்து, டெல்லி ஜன்பத்தில் உள்ள சாகர் ரத்னா உணவகத்துக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
