திருப்பரங்குன்றம் தீர்ப்பு : தலைமை நீதிபதி தாமாகவே கவனத்தில் எடுத்து உத்தரவை சரிசெய்ய வேண்டும் – சிபிஎம்

By Pandeeswari Gurusamy

|

Published on 27 Nov 2026, 5:45 PM

Thiruparankundram

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளதாகவும், நீதி பரிபாலன நெறிகளுக்கு முரணானதாகவும் உள்ளது. இந்த விவகாரத்தில் அனைத்து ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும். மத வேறுபாடு கடந்து ஒருமைப்பாட்டை மக்கள் வெளிப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் இன்றைய இடைக்கால உத்தரவு அதிர்ச்சியளிக்கின்றது. நீதி பரிபாலன முறைமைக்கு உகந்ததாக அமையவில்லை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக் காட்டுகிறது.

ADVERTISEMENT

இன்றைய உத்தரவில், ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு மேற்பார்வையில் நடைபெறும்; மலையில் மத்தியத் துணைக் காவல் படையினர் பாதுகாப்பு தரப்பட வேண்டும்; தர்காவில் இருந்து 50 அடி தூரத்தில் இருந்து எல்லோரும் தீபம் ஏற்றலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு அதிர்ச்சிதரத் தக்கது. வழக்கின் பிரதான கேள்விக்கு விடை காண்கிற இறுதித் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில், இடைக் கால உத்தரவு என்பதே இவ்வளவு விபரீதமாக அமைவது எந்த வகையிலும் ஏற்க இயலாதது.

மதவெறி அமைப்புகள் ஏற்கனவே மக்கள் மத்தியில் வெறியூட்டும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் மலையின் மீது எல்லோரும் தீபம் ஏற்றலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது பதட்டத்தை உருவாக்கக் கூடியதாகும். பாபர் மசூதி இடிப்பு என்ற கசப்பான நிகழ்வை இந்தியா சந்தித்து இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.

ADVERTISEMENT

கூட்டாட்சிக்கு விரோதமான உத்தரவாகவும் இது அமைந்திருக்கிறது. முழுக்க முழுக்க அரசு நிர்வாகத்தை ஓய்வு பெற்ற நீதிபதிகள், சி.ஆர்.பி.எப் இடம் ஒப்படைப்பது என்பது இதுவரை காணாத நிகழ்வு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைப் புறந்தள்ளி வழங்கப்பட்டுள்ள உத்தரவு தவறான முன்னுதாரணமாக வரலாற்றில் நிற்கப்போகிறது. உச்சநீதிமன்றத்தின் நீதி பரிபாலன முறை மீறல் என்றே இந்த இடைக் கால உத்தரவு கருதப்பட வேண்டியுள்ளது.

1947 வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991 இந்தியாவில் மத நல்லிணக்கத்தை உறுதி செய்கிற வகையில் நீண்ட நெடிய விவாதங்களின் பின்புலத்தில் உருவாக்கப்பட்டதாகும். ஆனால், அந்த சட்டம் எண்ணத்திலும், எழுத்திலும் உச்சநீதிமன்றத்தினாலேயே கருத்தில் கொள்ளப்படாதது அரசியல் சாசன நெறிகளுக்கும், விழுமியங்களுக்கும் முரணானது ஆகும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாமாகவே கவனத்தில் எடுத்து உத்தரவை சரிசெய்ய வேண்டும்.

ADVERTISEMENT

திருப்பரங்குன்றம் பிரச்சனையில் உறுதியான நிலைப்பாட்டை தற்போதைய அரசும் முந்தைய அரசுகளும் மேற்கொண்டு வந்துள்ளன. ஆகவே தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் அனைத்தும் இப் பிரச்சனையில் ஓரணியில் திரண்டு குரலெழுப்ப வேண்டும்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சட்ட நிபுணர்களோடு கலந்தாலோசித்து உரிய சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் எல்லோரும் மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கவும், அரசியல் சாசனத்தின் மதச்சார்பின்மை விழுமியம் நிலைநாட்டப்படவும் உடனடியாக மக்களை திரட்டி தங்களின் உறுதியான நிலைபாட்டை வெளிப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டின் பாரம்பரியத்திற்கு ஏற்ப மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தமிழக மக்கள் தங்களின் ஒன்றுபட்ட உணர்வை வெளிப்படுத்த வேண்டும்.
மத நல்லிணக்கம் பேணுவோம்; மனிதம் போற்றுவோம் என்ற முழக்கமே தமிழ்நாடு மண் முழுவதும் எதிரொலிக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel