தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய சம்பவத்தில் 9 சிறைக்காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் இன்று (அக்.27) சிறைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் நேற்று (அக்.26) இரவு கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதுபோல நாடகமாடியுள்ளனர். இதனால் சிறைக்காவலர்கள் அறையைத் திறந்தபோது, அவர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடினர்.

இதையடுத்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தப்பிய கைதிகளைப் பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
முதலில் சிறைக்குப் பின்புறம் உள்ள வனப்பகுதியில் பதுங்கியிருந்த மதுரையைச் சேர்ந்த பிரவீன்குமார் பிடிபட்டார். தொடர்ந்து தேனியைச் சேர்ந்த சிலம்பரசன், மதுரையைச் சேர்ந்த ராஜா சிக்கந்தர், ராஜ்குமார் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இதுவரை 4 பேர் பிடிபட்டுள்ள நிலையில், எஞ்சிய 13 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

3 அடுக்கு பாதுகாப்பை மீறி தப்பியது எப்படி?
இந்த நிலையில், சென்னையில் இருந்து மதுரை வந்த சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், தேக்கம்பட்டி சிறைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கைதிகள் எவ்வாறு தப்பிச் சென்றனர், சிறையின் பாதுகாப்பில் என்ன குறைபாடுகள் இருந்தன என்பது குறித்து விசாரணை நடத்தினார்.
அப்போது, கைதிகள் தப்பியதற்கு மனிதத் தவறுகளே காரணம் என்று தெரிவித்த டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், பாதுகாப்புக் காவலர்கள் பணியில் இருந்த 3 அடுக்கு பாதுகாப்பையும் மீறி கைதிகள் தப்பியிருப்பது பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதைக் காட்டுவதாகக் கூறினார்.

9 சிறை காவலர்கள் சஸ்பெண்ட்
இந்தச் சம்பவம் தொடர்பாக 9 சிறைக் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கைதிகள் தப்பியதற்கான காரணங்கள் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை சிறைத்துறை டிஐஜி முருகேசனும் சிறைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
வனப்பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் தேடுதல்
தலைமறைவாக உள்ள 13 கைதிகளில் சிலர் தேனி மாவட்டத்தின் அடர்ந்த வனப்பகுதிகளில் பதுங்கியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதனால் வனப்பகுதிகளில் ட்ரோன்கள் மூலமாகத் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு அதிரடிப்படை போலீசாரும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு – கேரள மாநில எல்லைப் பகுதிகளில் தீவிர வாகனச் சோதனை நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையங்கள், முக்கிய சாலைகள் மற்றும் சோதனைச் சாவடிகளிலும் போலீசார் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர்.
இதனிடையே, தப்பிய கைதிகள் சிறைக்காவலர் ஒருவரைத் தாக்கி, அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பறித்துச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தலைமறைவாக உள்ள கைதிகள் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள் 9498101570 அல்லது 9176104100 என்ற தொலைபேசி எண்களில் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
