VIDEO: தேனி சிறையில் 17 கைதிகள் தப்பியது எப்படி? தென்மண்டல ஐஜி ‘ஷாக்’ தகவல்!

Published On:

| By Mathi

Theni Jail Escape-IG Press

தேனி மாவட்ட சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளைப் பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தென்மண்டல காவல்துறை தலைவர் விஜயேந்திர பிதாரி தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில், வலிப்பு ஏற்பட்டதுபோல நாடகமாடி சிறைக் காவலரைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இதையடுத்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி சிறைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் ஐஜி விஜயேந்திர பிதாரி கூறியதாவது: இரவு சுமார் 10.20 மணியளவில் சிறையிலிருந்து கைதிகள் தப்பியோடியது குறித்து சிறைத்துறை அதிகாரிகளிடமிருந்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். கைதி ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், வலிப்பு வந்ததுபோல நாடகமாடிவிட்டுக் கைதிகள் தப்பியோடியதாகவும் தெரிகிறது. இது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

ADVERTISEMENT

தப்பியோடிய கைதிகள் குறித்த முழு விவரங்களும் எங்களிடம் உள்ளன. ஆனால் விசாரணை நடைபெற்று வருவதால் தற்போதைக்கு அந்த விவரங்களை வெளியிடுவது சரியாக இருக்காது.

17 தனிப்படைகள் அமைப்பு

தப்பியோடிய கைதிகளைப் பிடிப்பதற்காக 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தில் காவல்துறையினர் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஏனெனில் சம்பவத்திற்குப் பிறகுதான் காவல்துறையினர் இங்கு வந்துள்ளனர். சிறைத்துறை அதிகாரிகளில் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சிறை வளாகத்திலிருந்து கைதிகள் எப்படித் தப்பினார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முழு விவரங்களையும் விரைவில் தெரிவிப்போம். இவ்வாறு ஐஜி விஜயேந்திர பிதாரி கூறினார்.

இதனிடையே, தப்பியோடிய கைதிகள் அண்டை மாவட்டங்களுக்குச் செல்லாமல் தடுக்கத் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 16 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share