தமிழக முதல்வர் விஜய், செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று (அக்டோபர் 26) ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதைத் தொடர்ந்து, ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் பாதுகாப்புப் பணிகள் குறித்து இன்று மாலை தமிழக முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர்கள் ரஞ்சித் குமார், தென்னரசு ஆகியோர் முதல்வரை வரவேற்றனர்.
மேலும், ஏரியின் 5 கண் மற்றும் 19 கண் மதகுகள் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஏரியின் நீர் இருப்பு, கொள்ளளவு மற்றும் மழை வந்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஏரிக்கு தற்போது நீர்வரத்து 150 கன அடியாக இருக்கும் நிலையில், 208 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஏரியின் மொத்த உயரம் 24 அடி என்ற நிலையில், தற்போது 14.88 அடியாக நீர் இருப்பு உள்ளது.
24 மணி நேரமும் ஏரியைக் கண்காணிப்பதோடு, கட்டுப்பாட்டு அறை முழு எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் தொடர்ந்து இயங்க வேண்டும் என்றும்; உபரி நீரைத் திறக்கும் போது முன்னெச்சரிக்கை விடுப்பது அவசியம் என்றும்; அடையாறு கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்களைப் பாதிக்காத வகையில் நீரைத் திறக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
