கோவையில் தற்கொலை செய்துகொண்ட மாணவன் அகிலனின் பெற்றொருக்கு அரசு சார்பில் ரூ.6 லட்சம் நிதியுதவிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.
கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் – கௌசல்யாதேவி தம்பதியின் 16 வயது மகன் அகிலன். அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில், அக்டோபர் 21ஆம் தேதி அகிலன் வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதற்கு, பள்ளியில் நடந்த சாதிய வன்கொடுமை தான் காரணம் என்று அகிலனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுபற்றி பீளமேடு போலீசார் விசாரித்து வந்தனர்.
வகுப்பு ஆசிரியர் விஜய குமார் மற்றும் தலைமை ஆசிரியர் அருண் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று 6 ஆவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பீளமேடு போலீஸாரின் விசாரணையில் நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்த அகிலனின் பெற்றோர், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக சிபிஎம், மே 17 இயக்கத்தினரும் இன்று கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தசூழலில், அகிலன் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் இன்று உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து, அகிலனின் குடும்பத்தினருக்கு ரூ.6 லட்சம் நிதியுதவியும், மாணவனின் சகோதரிக்கு ஆனைகட்டி உண்டு உறைவிடப்பள்ளியில் இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன ஆணையையும் அமைச்சர் சம்பத் குமார் இன்று வழங்கியுள்ளார்.
