சிறுமிகளை சீரழித்த ‘ஜெம்’ வீரமணி மீதான போக்சோ வழக்கில் 3 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் இன்று (அக்டோபர் 26) தெரிவிக்கப்பட்டது.
ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி பத்திரிகையாளர் வராகி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் உயர் அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாகவும், தமிழக அரசு அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) சுதந்திரமாகவும் நேர்மையாகவும் விசாரணை நடத்துமா என்ற சந்தேகம் இருப்பதாகவும் வராகி தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் ஆதாரங்களைத் திரட்டுவதற்குப் போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
மேலும், இதுபோன்ற வழக்குகளில் விசாரணை நடத்துவதற்குக் கால அவகாசம் தேவைப்படும் என்றும், அனைத்து ஆதாரங்களையும் ஒரே நேரத்தில் திரட்டுவதற்குக் காவல்துறையிடம் மந்திரக்கோலோ, எதிர்காலத்தைக் காட்டும் மாயக்கண்ணாடியோ இல்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
3 வாரங்களில் குற்றப்பத்திரிகை
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை எந்த நிலையில் உள்ளது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஜான் சத்யன், வீரமணி தொடர்பான முதல் போக்சோ வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணிகள் ஏறக்குறைய முடிந்துவிட்டதாகவும், அடுத்த 3 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, இந்த வழக்கில் வராகி கூடுதல் பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், வீரமணிக்கு எதிரான வழக்கில் நடவடிக்கை கைவிடப்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, சுமார் ரூ.147 கோடி அளவுக்குப் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், ஐபிஎஸ் அதிகாரி அருண், சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் பணத்தின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி சுமார் ரூ.24 கோடி மதிப்புள்ள தங்கத்தை வாங்கியதாகவும் வராகி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்தப் பணப் பரிவர்த்தனைகளை ஏற்பாடு செய்தவர்கள் யார்? பணம் எங்கிருந்து வந்தது? தங்கம் வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட பணம் யாருடையது? வாங்கப்பட்ட சொத்துகளின் உண்மையான உரிமையாளர்கள் யார்? என்பது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
நவம்பர் 10-க்கு ஒத்திவைப்பு
இதையடுத்து, சிறப்புப் புலனாய்வுக் குழு தாக்கல் செய்த விசாரணை நிலை அறிக்கையை நீதிபதி லட்சுமிநாராயணன் ஆய்வு செய்தார். வராகி முன்வைத்த ரூ.147 கோடி பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைக் காவல்துறை ஏற்கெனவே கவனத்தில் எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக நீதிபதி குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை நவம்பர் 10-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
