தமிழகத்தில் கனமழை தொடரும் நிலையில் நீலகிரி (4 தாலுகா), ராமநாதபுரம், கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 26) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ராமநாதபுரம், கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 26) பள்ளிகளுக்கு ம்ட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய 4 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் சில பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. சின்னசேலம் ஈரியூர் பள்ளிக்கு மட்டும் அப்பகுதியில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
இதனிடையே, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த 3 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மிக கனமழை என்பது 11.56 சென்டிமீட்டர் முதல் 20.44 சென்டிமீட்டர் வரையிலான மழைப்பொழிவைக் குறிக்கும்.
13 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஓரிரு இடங்களில் 6.45 சென்டிமீட்டர் முதல் 11.55 சென்டிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று ரெட் அலர்ட் இல்லை
நேற்று (அக்டோபர் 25) புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று தமிழகத்தின் எந்த மாவட்டத்திற்கும் ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை.
இந்நிலையில் வங்கக்கடலின் மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்குப் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று (அக்டோபர் 26) புயலாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயல் அக்டோபர் 27-ந் தேதி தீவிரப் புயலாகவும், அக்டோபர் 28-ந் தேதி அதிதீவிரப் புயலாகவும் வலுப்பெற்று, ஆந்திரப் பிரதேசத்தின் பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்கக்கூடும்.
