கோவையில் இன்று பெய்த கனமழை காரணமாக, அரசு மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுக்குள் தண்ணீர் புகுந்ததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் கனமழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனை வளாகத்திலும் மழைநீர் தேங்கியது.
குறிப்பாக கோவை அரசு மருத்துவமனையின் பழைய கட்டிடத்தின் தரைத்தளத்தில் இருந்த வார்டுக்குள் மழை நீர் புகுந்தது. இதன் காரணமாக அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். அங்கிருந்த நோயாளிகள் அனைவரும் வேறு வார்டுக்கு மாற்றும் நடவடிக்கையில் மருத்துவமனை நிர்வாகம் ஈடுபட்டது.
இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் மழைநீர் புகுந்த வார்டுகளில், தண்ணீரை அகற்றும் பணியில் மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதனிடையே மழை நீரை அகற்றும் பணிகளை கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பானவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் மருத்துவமனையின் மற்ற பகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்ட னர். மழை தொடரும் பட்சத்தில் தண்ணீர் தேங்கும் பகுதிகளை பார்வையிட்டு அவற்றை உடனடியாக வெளியேற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
