நீதிபதிகள் நியமனத்தில் மோடி அரசு தலையீடு? உச்சநீதிமன்ற நீதிபதி புத்தகத்தில் பகீர் தகவல்கள்!

Published On:

| By Mathi

Justice Kaul Book

பிரதமர் மோடி அரசின் விருப்பத்துக்கு ஏற்ப நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டதாக, நீதிபதிகளைத் தேர்வு செய்யும் கொலீஜியம் குழுவில் பணியாற்றிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தனது புத்தகத்தில் திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் எழுதியுள்ள நினைவுக் குறிப்புகள் அடங்கிய புத்தகம் Without Fear or Favour. ஜக்கர்நாட் (Juggernaut) பதிப்பகம் வெளியிடவுள்ள இந்தப் புத்தகத்தை முன்வைத்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், இன்று (அக்டோபர் 25) அதில் இடம்பெற்றுள்ள முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

Without Fear or Favour என்பதற்கு ‘அச்சமின்றி, பாரபட்சமின்றி’ என்று பொருள். இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பதவிப் பிரமாணத்திலேயே இடம்பெற்றுள்ள இந்தச் சொற்றொடரைத் தனது புத்தகத்தின் தலைப்பாகத் தேர்ந்தெடுத்துள்ளார் கவுல். முன்னாள் குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி, சிபிஐ முன்னாள் இயக்குநர் ஜோகிந்தர் சிங் உள்ளிட்டோரும் இதே பெயரில் தங்களது நினைவுக் குறிப்புகளை நூல்களாக வெளியிட்டுள்ளனர்.

நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர். 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்ற அவர், 2023-ம் ஆண்டு டிசம்பரில் ஓய்வுபெற்றார்.

ADVERTISEMENT

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையில் இருந்த மூத்த நீதிபதியான கவுல், நீதிபதிகள் நியமனத்திற்கான கொலீஜியம் குழுவிலும் இடம்பெற்றிருந்தார். அந்தக் காலகட்டத்தில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட்டுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளையும் தனது புத்தகத்தில் விவரித்துள்ளார்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்கள்

மத்திய அரசிடம் அதிகப் பணிவு காட்டிய சந்திரசூட்

ADVERTISEMENT

நீதிபதிகள் நியமன விவகாரங்களில் அப்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், மத்திய அரசிடம் அளவுக்கு அதிகமாக (too deferential to the Government) பணிந்து நடந்துகொண்டார்.

2022-ம் ஆண்டு ஜூன் மாதம் கொலீஜியம் குழுவில் இடம்பெற்றபோது, மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைகளை இருவரும் இணைந்து நடத்தலாம் என்று சந்திரசூட்டிடம் யோசனை தெரிவித்தேன்.

நான் தலைமை நீதிபதியாக இல்லாததால், மத்திய அரசிடம் கடுமையாக வாதாட முடியும் என்றேன். ஆனால், ஒரு சில நேரங்களைத் தவிர, மத்திய அரசுடனான உறவைத் தலைமை நீதிபதியாக இருந்த சந்திரசூட் தனியாகவே கையாள்வதையே விரும்பினார்.

5 நீதிபதிகள் பட்டியலில் திடீரென 6-வது பெயர்

உச்சநீதிமன்றத்தில் காலியாக இருந்த 6 நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்காக கொலீஜியம் குழு ஆலோசனை நடத்தியது. அப்போது 5 பேரின் பெயர்களைப் பரிந்துரைப்பது குறித்து கொலீஜியம் உறுப்பினர்களிடையே ஏற்கெனவே உடன்பாடு ஏற்பட்டிருந்தது.

ஆனால், 6-வதாக ஒரு பெயரைச் சந்திரசூட் திடீரென முன்மொழிந்தார். அந்தப் பெயரை மற்ற நீதிபதிகள் ஏற்கவில்லை. அந்த 6-வது பெயர் மத்திய அரசின் விருப்பத்தின் அடிப்படையில் முன்மொழியப்பட்டிருக்கலாம்.

அப்போது, என்னைத் தனியாக அழைத்துச் சென்ற சந்திரசூட், அந்த நீதிபதியைப் பட்டியலில் சேர்ப்பது குறித்து மத்திய அரசின் கருத்தைத் தெரிந்துகொள்ளலாமா என்று கேட்டார். கொலீஜியம் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே அரசிடம் கருத்துக் கேட்பது முறையல்ல என எதிர்த்தேன். அதனால் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட 5 நீதிபதிகளின் பெயர்கள் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டன.

நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுடன் ஆலோசனை நடத்துவதற்கும், கொலீஜியம் முடிவெடுப்பதற்கு முன்பே அரசின் ஒப்புதலைப் பெறுவதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது (There is a difference between consultation and what I came to regard as pre-approval).

அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால் மேலும் அதிகாரம் செலுத்த முயல்வார்கள். அதனைத் தடுக்க நீதித்துறை தனது சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும்.

சிறுபான்மை நீதிபதிக்கு நேர்ந்த துயரம்

மற்றொரு கொலீஜியம் கூட்டத்தில், சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஒருவரை நீதிபதியாக நியமிப்பது தொடர்பாக மத்திய அரசு சில கேள்விகளை எழுப்பியது. ஏற்கெனவே பிற சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த நீதிபதிகள் பதவியில் இருக்கும்போது, மேலும் சிறுபான்மையினருக்குப் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டுமா என்று அரசு கேட்டது. அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நீதிபதி வேட்பாளரின் குடும்பம் எந்தச் சாதியைச் சேர்ந்தது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

பல தலைமுறைகளாக ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றி வரும் குடும்பத்தின் பூர்வீக சாதியை எப்படிக் கண்டறிய முடியும் என்றும், நீதிபதி நியமனத்திற்கு அது எப்படிப் பொருத்தமான கேள்வியாக இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினேன். மத்திய அரசின் கேள்விகளால் அதிருப்தியடைந்த நான், இப்படித்தான் நீங்கள் நீதிபதிகளை நியமிக்கப் போகிறோம் என்று சொன்னால், கொலீஜியம் அமைப்பு எதற்கு என்று கேட்டேன்.

நீதிபதிகள் நியமனத்தை அரசுடன் ஆலோசித்து நீங்களே மேற்கொள்ளுங்கள்; அப்படிப்பட்ட முடிவில் என்னால் பங்கேற்க முடியாது என்று சொல்லிவிட்டு, ஃபைலை மூடிவிட்டு கொலீஜியம் கூட்டத்திலிருந்து வெளியேறினேன்.

நீதிபதிகள் நியமனம் மட்டுமின்றி, வழக்குகளை நீதிபதிகள் அமர்வுகளுக்கு ஒதுக்குவதிலும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.

வழக்கு விசாரணைப் பட்டியலில் தலையிட்ட மத்திய அரசு

பணமோசடித் தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act – PMLA) தொடர்பான உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பில் சில அம்சங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டுமா என்ற கேள்வி, என் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால், இந்த விவகாரத்தை விசாரணைக்குப் பட்டியலிட்டதையே மத்திய அரசு தனக்கு சாதகமற்ற நடவடிக்கையாகக் கருதியது. அப்போது, எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படாமல் அந்த வழக்கு வேறொரு அமர்வுக்கு மாற்றப்பட்டது.

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்

2015-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் (National Judicial Appointments Commission – NJAC) செயல்படுவதற்கு ஒரு வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும்.

தற்போது நடைமுறையில் உள்ள கொலீஜியம் அமைப்பிலும் வெளிப்படைத்தன்மையின்மை, மத்திய அரசின் நெருக்கடி எனக் குறைபாடுகள் இருக்கின்றன.

சந்திரசூட் அளித்த பதில் என்ன?

நீதிபதி கவுலின் குற்றச்சாட்டுகள் குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டிடம் விளக்கம் கேட்டுள்ளது. அதற்குப் பதிலளித்த சந்திரசூட், கவுல் எழுதிய புத்தகத்தைத் தாம் இன்னும் படிக்கவில்லை என்றும், அவர் எந்தச் சூழலில் அந்தக் கருத்துகளை எழுதியுள்ளார் என்பதை அறியாமல் விரிவான பதில் அளிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். தாம் தலைமை நீதிபதியாக இருந்தபோது கொலீஜியம் கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்றதாகவும், கவுலுடன் நல்ல, மரியாதையான உறவே இருந்ததாகவும் கூறினார்.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share