கோவையில் பெருமழை.. மருதமலை முருகன் கோவிலில் அருவியாக கொட்டிய பெருவெள்ளம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவையின் பல்வேறு பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வந்த நிலையில், இன்று காலையில் கடும் வெயில் சுட்டெரித்தது. பிற்பகலில் திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது.

ADVERTISEMENT

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், காந்திபுரம், டவுன்ஹால், சிட்கோ, அவினாசி சாலை, உக்கடம், இராமநாதபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

நஞ்சுண்டாபுரம் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரோடு கலந்த கழிவு நீர்

ADVERTISEMENT

அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்திலிருந்து குழாய்கள் வழியாக வெளியேறிய மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலையில் ஆறுபோல் ஓடியது. இதனால் அந்த வழியாக சென்றவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

ADVERTISEMENT

கோவை சுங்கம் பகுதியில் இருந்து நெடுஞ்சாலை நகர் செல்லும் ரெட் பீல்ட்ஸ் சாலையில் மழை பெய்யும்போது மழைநீர் சாலையில் பெருமளவில் தேங்கி, அருகில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்து விட்டதாக அப்பகதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். அப்பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் அமைப்புகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளதே தண்ணீர் தேங்குவதற்கு முக்கியக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள ஜவுளிக்கடைகளில் புத்தாடைகள் வாங்குவதற்காகப் பொதுமக்கள் அதிகளவில் குவிந்து வந்த நிலையில், திடீரென பெய்த கனமழையால் கடைகளுக்கு வந்த மக்கள் மழையில் நனையாமல் ஒதுங்குவதற்கு இடமின்றித் தவித்தனர்.

மழையால் சாலைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாகச் சென்றனர்.

மருதமலை கோயில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்

மேலும் கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் கோயிலில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share