அக். 28-ல் ஆந்திராவை ’அட்டாக்’ செய்யும் அதி தீவிர புயல் ‘அர்னாப்’.. ’ஆரஞ்சு’ எச்சரிக்கை- தமிழ்நாட்டுக்கு பாதிப்பா?

Published On:

| By Mathi

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று (அக்டோபர் 25) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை புயலாகவும், பின்னர் அதி தீவிர புயலாகவும் வலுப்பெற்று அக்டோபர் 28-ந் தேதி ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் தென்மேற்கு திசையில் நகர்ந்தது.

ADVERTISEMENT

இது இன்று (அக்டோபர் 25) காலை 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அட்சரேகை 15.1° வடக்கு மற்றும் தீர்க்கரேகை 91.0° கிழக்கு பகுதியில் மையம் கொண்டுள்ளது.

இந்தப் பகுதி அந்தமான் தீவுகளில் உள்ள ஸ்ரீ விஜயபுரத்திற்கு வடக்கு – வடமேற்கே 420 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்திற்கு கிழக்கு – தென்கிழக்கே 870 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், காக்கிநாடாவிலிருந்து 960 கிலோ மீட்டர், மச்சிலிப்பட்டினத்திலிருந்து 1,060 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு – தென்கிழக்கு திசையிலும், பாபட்லாவிலிருந்து 1,130 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்குத் திசையிலும் நிலைகொண்டுள்ளது.

நாளை புயலாக வலுப்பெறும்

இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்து தென்மேற்கு திசையில் நகர்ந்து, நாளை (அக்டோபர் 26) அதிகாலையில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் புயலாக வலுப்பெறக்கூடும்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளைக் கடந்து செல்லும். அக்டோபர் 27-ந் தேதி காலை மத்திய மேற்கு வங்கக் கடலில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.

அதன் பின்னரும் புயலின் தீவிரம் அதிகரித்து, வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 28-ந் தேதி காலையில் ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு அருகிலுள்ள மத்திய மேற்கு வங்கக் கடலை அடையும்.

அக்டோபர் 28-ல் கரையைக் கடக்கும்

இந்தப் புயல் அக்டோபர் 28-ந் தேதி முற்பகலில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்கக்கூடும். அப்போது புயல் அதி தீவிர புயலாக (Very Severe Cyclonic Storm) இருக்கும்.

புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 115 முதல் 125 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும். இடையிடையே காற்றின் வேகம் மணிக்கு 140 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

ஆரஞ்சு எச்சரிக்கை

இதனால் ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற புயல் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

புயல் கரையைக் கடப்பதற்கு முன்னதாகவே ஆந்திரப் பிரதேச கடலோர மாவட்டங்களில் கனமழை தீவிரமடையக்கூடும். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அக்டோபர் 25-ந் தேதி மழை எச்சரிக்கையின்படி, கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் அக்டோபர் 26-ந் தேதி கனமழையும், அக்டோபர் 27 மற்றும் 28-ந் தேதிகளில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.

அக்டோபர் 29-ந் தேதியும் கனமழை தொடர வாய்ப்புள்ளது. புயலின் தாக்கத்தால் பலத்த காற்றும் வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு பாதிப்பு இருக்குமா?

தற்போது வெளியிடப்பட்டுள்ள புயல் பாதை முன்னறிவிப்பின்படி, இந்தப் புயல் தமிழகத்தில் நேரடியாகக் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்படவில்லை. ஆந்திரப் பிரதேசத்தின் பட்லா – விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், புயலின் நகர்வு மற்றும் தீவிரத்தில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்தே தமிழகத்தில் மழை, காற்றின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது தெரியவரும்.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share