சிறுமிகளை சீரழித்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி மீது 8-வது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் 5 பேருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரும் ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளருமான வீரமணி மீது சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
வீரமணியின் கூட்டாளிகளான சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், வீரமணியின் முன்னாள் ஊழியர் கணேசன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
12 சிறுமிகள் புகார்; 8 வது வழக்கு
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 12 சிறுமிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் ஜெம் வீரமணி மீது 8-வது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
5 பேருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் 5 பேருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜெம் வீரமணி வழக்கில் விசாரணைக்காக தேடப்படும் நபர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதையோ, வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும்போது தப்புவதையோ தடுக்கும் வகையில் விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்படும்.
ஏற்கெனவே, வீரமணி தொடர்பான பணப்பரிவர்த்தனை விவகாரத்தில் ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி கண்ணையாவின் மகன் பிரகாஷுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அவர் வெளிநாட்டில் இருப்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனிடையே, ஜெம் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகிய மூவரையும் பணப்பரிவர்த்தனை தொடர்பாக மீண்டும் விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவினர் நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். இதற்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, மூவரையும் 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து பெரவள்ளூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீரமணி மீதான வழக்குகளை மூடி மறைக்கப் பணம் வழங்கப்பட்டதா? அப்படியானால் அந்தப் பணம் யார் யாருக்குச் சென்றது? பணப்பரிவர்த்தனைகளுக்கு உதவியவர்கள் யார்? என்பது உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், வீரமணியின் மகள் அர்ச்சனா சிங்கப்பூர் செல்ல முயன்றபோது சென்னை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையின்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை, மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
