பொதுமக்கள் இன்று ஏற்காடு வருவதை தவிர்க்க வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பரவலாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு ஆத்தூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. ஏற்காடு மலைப்பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.
குறிப்பாக இன்று ஏற்காட்டில் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, ஏற்காடு மலைப்பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேபோல், உள்ளூரைச் சேர்ந்த பொதுமக்களும் மழை நேரங்களில் வாகனங்களில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், ஏற்காடு செல்லும் சாலையில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் காவல்துறையினருக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேபோல் நீலகிரி மற்றும் வால்பாறை பகுதிகளுக்கும் பொதுமக்கள் வர வேண்டாம் என்று அப்பகுதிகளின் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
