வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை (அக்டோபர் 26) புயலாக வலுப்பெற உள்ளது. இந்தப் புயல் அக்டோபர் 28-ந் தேதி ஆந்திரா கடற்கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்று (அக்டோபர் 25) காலை நிலவரப்படி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அந்தமான் தீவுகளின் ஸ்ரீ விஜயபுரத்திலிருந்து 440 கி.மீ. தொலைவிலும், ஆந்திராவின் விசாகப்பட்டினத்திலிருந்து 880 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.


இது இன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும், அக்டோபர் 27-ந் தேதி தீவிர புயலாகவும் வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 28-ந் தேதி முற்பகலில் ஆந்திராவின் பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கக்கூடும். அப்போது மணிக்கு 115 முதல் 125 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இடையிடையே மணிக்கு 140 கி.மீ. வேகம் வரை அதிகரிக்கக்கூடும்.
இந்தப் புயலுக்கு ‘அர்னாப்’ எனப் பெயர் சூட்டப்பட உள்ளது. வங்கதேசம் பரிந்துரைத்த இந்தப் பெயருக்கு வங்க மொழியில் ‘கடல்’ என்று பொருள். தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவே இருப்பதால், புயலாக வலுப்பெற்ற பின்னரே இந்தப் பெயர் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்படும்.
