தஞ்சாவூரில் உள்ள A TO Z தனியார் மருத்துவமனையின் நிர்வாகப் பிரச்சினையில் தலையிட்டு, ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக காவல்துறை அதிகாரிகள் மீது புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் சுகுமாறன் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் வைக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் என்ன பிரச்சினை?
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே A TO Z என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக ஆர்.எம்.பாஸ்கரனும், இயக்குநராக சரவணனும் உள்ளனர். இந்த மருத்துவமனையின் பங்குதாரர்களுக்கு இடையே நிர்வாகம் மற்றும் உரிமை தொடர்பாகப் பிரச்சினை ஏற்பட்டது.
மருத்துவமனையின் முன்னாள் பங்குதாரரான ஜெயஸ்ரீ ராமசாமிக்கு ரூ.19 கோடி கொடுத்து, அவரது பங்குகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தப் பணப்பரிவர்த்தனை தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரும் போலீசில் புகார் அளித்தனர்.
இந்தப் பிரச்சினையில் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பாஸ்கரன், இயக்குநர் சரவணன் உள்ளிட்டோர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பாஸ்கரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர்.
ரூ.5 கோடி லஞ்சம் கேட்டதாகப் புகார்
இந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகத்தினர் அக்டோபர் 22-ந் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து காவல்துறை அதிகாரிகள் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அப்போது, மருத்துவமனையின் பங்குதாரர் பிரச்சினையில் திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தலையிட்டதாகவும், ரூ.5 கோடி கொடுக்க வேண்டும் என்று தங்களை மிரட்டியதாகவும் குற்றம்சாட்டினர். பணம் கொடுக்காவிட்டால் மருத்துவமனை நிர்வாகத்துக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்துவோம் என்று எச்சரித்ததாகவும் தெரிவித்தனர்.
இதனால் ரூ.5 கோடியை ரொக்கமாகவும் காசோலையாகவும் திரட்டி, தஞ்சாவூர் மாவட்டக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுகுமாறனின் வீட்டிற்குச் சென்று கொடுத்ததாக மருத்துவமனை இயக்குநர் சரவணன் தெரிவித்தார்.

காவல் ஆய்வாளர் சுகுமாறன் கைதும் விடுதலையும்
இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை இயக்குநர் சரவணன் தமிழக டிஜிபியிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரில், மருத்துவமனை நிர்வாகப் பிரச்சினையில் காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு, தங்களை மிரட்டி ரூ.5 கோடி பெற்றதாகத் தெரிவித்திருந்தார். இதையடுத்து, இந்தப் புகார் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி, அக்டோபர் 9-ந் தேதி தஞ்சாவூரில் உள்ள காவல் ஆய்வாளர் சுகுமாறனின் வீட்டில் சோதனை நடத்தினர். பின்னர் அவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டபோது சுகுமாறனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்பட்டதால், அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார். அக்டோபர் 12-ந் தேதி அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
சுகுமாறன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை அக்டோபர் 16-ந் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, சிபிசிஐடி போலீசார் அவரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
இதனிடையே சுகுமாறன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அக்டோபர் 23-ந் தேதி விசாரித்த உயர் நீதிமன்றம், சுகுமாறனைக் கைது செய்தபோது அதற்கான காரணங்களை போலீசார் முறையாகத் தெரிவிக்கவில்லை என்று சுட்டிக்காட்டியது. இதனால் அவரது கைது சட்டவிரோதமானது என்று அறிவித்த நீதிமன்றம், அவரை விடுவிக்க உத்தரவிட்டது.
அதேநேரத்தில், சுகுமாறன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என்றும் தெரிவித்தது.



கட்டுக்கட்டாக ரூ.5 கோடி.. வெளியான வீடியோ
இந்த நிலையில், ரூ.5 கோடி பண பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறப்படும் செல்போன் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், பைகளில் கொண்டு வரப்பட்ட கட்டுக்கட்டான பணம் மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அத்துடன், மருத்துவமனையின் பங்குதாரர்களுக்கு இடையே நடைபெற்ற பணப்பரிவர்த்தனை குறித்து பேசப்படும் உரையாடலும் இடம்பெற்றுள்ளது. அதில், இரு தரப்பினரும் இணைந்து மருத்துவமனையைத் தொடங்கியதாகவும், தற்போது ஜெயஸ்ரீ ராமசாமி தரப்பினர் பங்குதாரர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் ஒருவர் விளக்குகிறார்.
இதற்காக ரூ.24 கோடி வழங்கப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், சிலர் முன்னிலையில் பஞ்சாயத்து பேசி ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
மேலும், முதல்கட்டமாக ரூ.5 கோடி வழங்கப்படுவதாகவும், மீதமுள்ள ரூ.19 கோடியை மூன்று மாதங்களுக்குள் வழங்கி கிரயம் செய்து கொள்வதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்.
அப்போது மற்றொருவர், “இப்போது பாக்கி எவ்வளவு கொடுக்க வேண்டும்?” என்று கேட்கிறார். அதற்கு ரூ.19 கோடி என்று பதிலளிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் எந்த மனஸ்தாபமும் இல்லாமல், தங்களது விருப்பத்தின் அடிப்படையில் ஒப்பந்தம் செய்துகொண்டார்களா என்றும் கேட்கப்படுகிறது. அதற்கு ஆம் என்று பதிலளிக்கப்படுகிறது.
பின்னர், அங்குள்ள பணத்தைக் காட்டி, “இதில் எவ்வளவு இருக்கிறது?” என்று கேட்கும்போது, “இதில் ரூ.5 கோடி இருக்கிறது” என்று பதிலளிக்கப்படுகிறது.
இந்த உரையாடல் முழுவதும் மருத்துவமனையின் பங்குதாரர் ஒருவர் விலகுவதற்காக ரூ.24 கோடி வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தையும், அதில் முதல்கட்டமாக ரூ.5 கோடி கொடுக்கப்படுவதையும் விளக்குவதாக அமைந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
