பசிபிக் பெருங்கடலில் எல் நினோ (El Nino) நிகழ்வு தீவிரமடைந்து வரும் நிலையில், அதன் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வரலாற்றில் முதல்முறையாக 30 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. இது உலக அளவில் வானிலை மாற்றங்கள் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தின் வடகிழக்குப் பருவமழையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எல் நினோ என்றால் என்ன?
பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில், பூமத்திய ரேகையை ஒட்டிய கடல் மேற்பரப்பு நீர் வழக்கத்தைவிட அதிகமாக வெப்பமடைவதே எல் நினோ எனப்படுகிறது. பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த இயற்கையான வானிலை மாற்றம், உலகின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு, வெப்பநிலையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
அதாவது எல் நினோ காலத்தில் சில நாடுகளில் கடுமையான வறட்சி ஏற்படலாம். அதே நேரத்தில் வேறு சில நாடுகளில் வழக்கத்தைவிட அதிகமான மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரழிவுக்கும் வாய்ப்புள்ளது.
எல் நினோ ‘உச்சம்’
எல் நினோ இந்த ஆண்டு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே இருந்து வருகிறது. இந்நிலையில் பசிபிக் பெருங்கடலின் மத்திய பகுதியில், பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அக்டோபர் 5-ந் தேதி 30.06 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) தரவுகளின்படி, இந்தப் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸைத் தாண்டியது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு நவம்பர் 17-ந் தேதி பதிவான 29.82 டிகிரி செல்சியஸ்தான் அதிகபட்ச வெப்பநிலையாக இருந்தது. அக்டோபர் 22-ந் தேதியும் இந்தப் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 30 டிகிரி செல்சியஸாக நீடித்துள்ளது. இந்த வெப்பநிலை உயர்வு, பசிபிக் பெருங்கடலில் எல் நினோ நிகழ்வு தீவிரமடைந்து வருகிறது என்பதையே வெளிப்படுத்தி இருக்கிறது.
அடுத்து என்ன நடக்கும்?
உலக வானிலை அமைப்பு (WMO) கடந்த அக்டோபர் 8-ந் தேதி வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஜூன் மாதத்தில் பசிபிக் கடல் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பைவிட 1.6 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் இந்த வேறுபாடு 2.5 டிகிரி செல்சியஸாக உயர்ந்தது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் இந்த வெப்பநிலை வேறுபாடு சராசரியாக 3.7 டிகிரி செல்சியஸை எட்டக்கூடும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பசிபிக் கடலின் குறிப்பிட்ட பகுதியில் மேற்பரப்பு வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. தற்போதைய எல் நினோ வெப்ப நிலை, வரும் டிசம்பரில் உச்சத்தை எட்டும் என்கின்றனர் புவியியல் வல்லுநர்கள்.
நமக்கு என்ன பாதிப்பு?
தமிழ்நாட்டில் பொதுவாக எல் நினோ ஆண்டுகளில் தென்மேற்குப் பருவமழை பலவீனமடைந்திருக்கிறது. சில எல் நினோ ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இயல்பைவிட அதிகமாக கொட்டித் தீர்த்திருக்கிறது.
கடந்த 2015-ம் ஆண்டு வலிமையான எல் நினோ நிகழ்வு காலம்.. அப்போது சென்னை மற்றும் வட மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்தது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் கடுமையான வெள்ளப் பேரழிவை சந்தித்தன. அதே நேரத்தில்
2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்கு எல் நினோ மட்டுமே காரணம் அல்ல; வங்கக்கடலில் உருவான வானிலை அமைப்புகள், அவற்றின் நகர்வு, தொடர்ந்து பெய்த கனமழை உள்ளிட்டவையும் காரணமாக சொல்லப்பட்டது.
பசிபிக் பெருங்கடலில் எல் நினோவால் வெப்ப நிலை அதிகரித்து வருவதால், தமிழகத்தில் தற்போது பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையும் அதிதீவிரமாகுமா என்ற கேள்வி எழுகிறது. இருப்பினும் இந்தியப் பெருங்கடல் வானிலை மாற்றம், வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள், புயல்கள் மற்றும் வளிமண்டலச் சுழற்சிகள் ஆகியவை வடகிழக்கு பருவமழையை கொட்டித் தீர்க்க காரணமாகவும் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
