VIDEO: காதலின் தீபம் ஒன்று… ராஜீவ் காந்தியைப் பார்த்த முதல் நொடியில் மலர்ந்த காதல்.. மனம் திறந்த சோனியா காந்தி!

Published On:

| By Mathi

Sonia Gandhi-Rajiv Gandhi- Love Story

நம் வாழ்க்கையில் சில சந்திப்புகள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவுகளாக மாறிவிடுகின்றன.. அப்படித்தான் 61 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஒரு சிறிய கிரேக்க உணவகத்தில் ராஜீவ் காந்தியை முதன் முதலில் சந்தித்த அந்த நொடியை, இன்றும் காதல் ததும்ப நினைவு கூர்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி…

சோனியா காந்தியின் வாழ்க்கை நினைவுகளைப் பதிவு செய்யும் Belonging: A Journey of Love என்ற சுயசரிதை நூல் வரும் நவம்பர் 10-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதையொட்டி இன்று (அக்டோபர் 24) எக்ஸ் சமூக வலைதளத்தில் ராஜீவ் காந்தியுடனான தனது காதல் நினைவுகளைப் பகிரும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். பழைய போட்டோக்களைப் பார்த்தபடியே, ராஜீவ் காந்தியை முதன்முதலில் சந்தித்த அந்த அழகிய தருணத்தை நினைவு கூர்ந்துள்ளார் சோனியா காந்தி.

ADVERTISEMENT

அந்த வீடியோவில் சோனியா காந்தி கூறியிருப்பதாவது: இங்கிலாந்தில் அப்போது உணவு மிகவும் மோசமாக இருந்தது.. இப்போது இருப்பதைப் போல அந்த நாட்களில் ஏராளமான உணவகங்கள் கிடையாது.

அதனால் எனக்குப் பிடித்த இத்தாலிய உணவு மாதிரியான உணவு எங்கே கிடைக்கும் என்று தொடர்ந்து தேடிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் ஒரு கிரேக்க உணவகத்தைக் கண்டுபிடித்தோம் (Varsity Restaurant). அந்த உணவகத்துக்கு ஐரோப்பிய மாணவர்கள் மட்டுமல்லாமல் இந்திய மாணவர்களும் சாப்பிட வருவார்கள்.

ADVERTISEMENT

அந்த கிரேக்க உணவகத்தில்தான் நான் ராஜீவ் காந்தியை முதன்முதலில் சந்தித்தேன். எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் ராஜீவ் காந்தியை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவரை முதன்முதலில் சந்தித்தபோதே, அவருடன் என் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று சட்டென தோன்றியது. அவருக்கும் அதே உணர்வு இருந்தது என்பதைப் பின்னர்தான் தெரிந்துகொண்டேன்.

அந்த சந்திப்புக்குப் பிறகு நாங்கள் நண்பர்களானோம். நண்பர்களுடன் விருந்துகளுக்கு செல்வோம். பல இடங்களை சுற்றிப் பார்ப்போம். ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்ட காதலர் தின விருந்துக்கும் நாங்கள் சென்றிருந்தோம்.

ADVERTISEMENT

ராஜீவ் மிகவும் மென்மையானவர்.. அமைதியானவர்.. மிகவும் அழகாகவும் இருந்தார். ராஜீவ் காந்தியிடம் வெளிப்பட்ட அந்த மென்மையான குணம்தான்.. அமைதியான பண்புதான் என்னை மிகவும் ஆழமாகத் தொட்டது.. என் மனதை கவர்ந்தது.. அதனால்தான் ராஜீவை முதன் முதலில் சந்தித்த அந்த தருணத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. இவ்வாறு அந்த வீடியோவில் சோனியா காந்தி கூறியுள்ளார்.

1965-ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜின் ஒரு கிரேக்க உணவகத்தில் தொடங்கிய ராஜீவ் காந்தி- சோனியா காதல், 1968- ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி திருமணத்தில் இணைந்தது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share