டிரான்ஸ்பர், புரமோஷனுக்கு ‘நேரடியாக’ மனு கொடுத்தால் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயும்- விஜய் அரசு எச்சரிக்கை!

Published On:

| By Mathi

TN- Vijay Govt

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் தங்களது பணியிட மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு நேரடியாக மனு அளிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்ககம் அக்டோபர் 22-ந் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் பல்வேறு அலுவலகங்களில் பணிபுரியும் சில அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தங்களது பணியிட மாறுதல், பதவி உயர்வு மற்றும் இதர தனிப்பட்ட கோரிக்கைகளுக்காக உரிய நிர்வாக வழிமுறையைப் பின்பற்றாமல் மாண்புமிகு அமைச்சர்களின் அலுவலகங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முதலமைச்சரின் முகவரி பிரிவு ஆகியோரிடம் நேரடியாக விண்ணப்பித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் நடத்தை விதிகள், 1973-ன் விதி 18-ன்படி, அரசு ஊழியர்கள் தங்களது பணிநலன் தொடர்பான விவகாரங்களில் அரசியல் செல்வாக்கையோ அல்லது வெளிச் செல்வாக்கையோ பயன்படுத்த முயற்சிக்கக் கூடாது.

மேலும், விதி 20-ன்படி, அரசு பணியாளர்கள் தங்கள் குறைகளை மேலதிகாரிகளிடம் தெரிவிக்கும்போது உரிய அதிகாரப்பூர்வ வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

ADVERTISEMENT

மீறினால் ஒழுங்கு நடவடிக்கை

இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூன்று முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

  1. அலுவலர்கள், பணியாளர்கள் தங்களது பணிகள் தொடர்பான எந்தவொரு கோரிக்கை அல்லது குறைகளுக்கும் உரிய நிர்வாக நடைமுறையைப் பின்பற்றி மட்டுமே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  2. துறைத் தலைவரின் முன் அனுமதியின்றி அல்லது உரிய வழியைப் பின்பற்றாமல் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது முதலமைச்சரின் முகவரி போன்ற உயர் அமைப்புகளுக்கு மனு அனுப்புவதோ, வெளிச் செல்வாக்குகளைப் பயன்படுத்த முயற்சிப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
  3. இந்த அறிவுறுத்தல்களை மீறி நேரடியாக மனுக்கள் சமர்ப்பிப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர் அல்லது பணியாளர் மீது தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின்கீழ் உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த அறிவுறுத்தல்களை மீறி நேரடியாக மனுக்கள் அளிப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் நடத்தை விதி 18-ஐ மீறியதாகக் கருதப்பட்டு, அவர்கள் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், இந்தச் சுற்றறிக்கையைத் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலர்கள், பணியாளர்களுக்கும் தெரிவித்து, அதற்கான ஒப்புதலைப் பெற்றுப் பராமரிக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, துறைத் தலைவர்களிடம் அளிக்கும் மனுக்களுக்குத் தீர்வு கிடைக்காத நிலையில், அமைச்சர்கள் அல்லது முதல்வரின் முகவரி பிரிவை அணுகுவதற்கும் கட்டுப்பாடு விதிப்பது ஊழியர்களின் குறைதீர்க்கும் வாய்ப்புகளைப் பாதிக்கும் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share