நீலகிரி நிலச்சரிவில் சிக்கி அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்த சோகம்!

Published On:

| By Kavi

நீலகிரி மாவட்டத்தில்  கனமழையால் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. 

ADVERTISEMENT

இந்தநிலையில் குன்னூரில் இருந்து கோவை நோக்கிச் சென்ற தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து, அதிகாலை பர்லியார் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது கனமழை காரணமாக மண் சரிவும், வேரோடு சாய்ந்த மரங்களும் பேருந்தின் மீது விழுந்தன. இதில் பேருந்து மண் மற்றும் சேற்றுக்குள் சிக்கியது. பேருந்தின் மேல் பகுதி முற்றிலும் சேதமடைந்தது. 

இந்தப் பேருந்தை ஓட்டுநர் ஜனகராஜ் ஓட்டிச் சென்றார். கேசவன் நடத்துநராகப் பணியாற்றினார். பேருந்தில் பயணம் செய்த சில பயணிகள் பர்லியார் பகுதியை அடைவதற்கு முன்பே இறங்கிவிட்டதால், விபத்து ஏற்பட்டபோது ஓட்டுநரும் நடத்துநரும் மட்டுமே பேருந்தில் இருந்தனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், காவல்துறையினருடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஓட்டுநர் ஜனகராஜ் மற்றும் நடத்துநர் கேசவன் ஆகிய இருவரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், பலத்த காயமடைந்த ஓட்டுநர் ஜனகராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயமடைந்த நடத்துநர் கேசவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

தொடர் கனமழையால் குன்னூர்–மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஊட்டி–மேட்டுப்பாளையம், ஊட்டி–குன்னூர் சாலைகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று நாட்களுக்கு யாரும் நீலகிரிக்கு வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. நீலகிரியில் அனைத்து சுற்றுலாத் தளங்களும் மூடப்பட்டுள்ளன. 

இதற்கிடையே அரசு பேருந்தை ராட்சத கிரேன் மூலம் அகற்றி, சாலையை சீரமைக்கும் பணியில் மீட்புபடையினரும் உள்ளூர் நிர்வாகத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

”​​ஓட்டுநர் பேருந்தின் இருக்கையில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்தார். நாங்கள் பேருந்து முழுவதிலும் வேறு யாராவது இருக்கிறார்களா என்று தேடினோம்.  அப்போது யாரும் இல்லை என்பது எங்களுக்கு நிம்மதி அளித்தாலும், ஓட்டுநர் உயிரிழந்தது வருத்தமாக இருந்தது” என்று மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share