திண்டுக்கல், மதுரை, தேனிக்கு நாளை ரெட் அலர்ட்.. கொடைக்கானலில் 5 இடங்களில் மண்சரிவு.. துண்டிக்கப்பட்ட அடுக்கம் மலைக் கிராமம்!

Published On:

| By Mathi

Dindigul- Red Alert- Kodaikanal

திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய 3 மாவட்டங்களுக்கு நாளை (அக்டோபர் 25) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கொடைக்கானலில் கொட்டித் தீர்த்த கனமழையால் 5 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் – அடுக்கம்- பெரியகுளம் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மலைப்பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (அக்டோபர் 24) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாளை (அக்டோபர் 25) திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் 20.4 செ.மீ.க்கும் அதிகமான அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பல வடமாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கொடைக்கானலில் 5 இடங்களில் மண்சரிவு

இதனிடையே, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கொட்டித் தீர்த்த கனமழையால் மலைச்சாலைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, கொடைக்கானலில் இருந்து பெரியகுளம் செல்லும் அடுக்கம் வழி மலைப்பாதையில் 5 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. குறுகிய நேரத்தில் 9 செ.மீ. மழை கொட்டித் தீர்த்ததால் சாலை உருக்குலைந்துள்ளது.

மண்சரிவால் அடுக்கம் மலைக் கிராமத்துக்குச் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட கிராமத்தைவிட்டு வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தன் கூறியது என்ன?

இது தொடர்பாக திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் சச்சிதானந்தன் கூறுகையில், “கடும் மழைப்பொழிவு காரணமாக கொடைக்கானல் வட்டம் அடுக்கம் கிராமம் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், கொடைக்கானல் வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் பேசி விரைந்து பாதையைச் சீர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கனமழையால் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு சாலைகள் சேதமடைந்துள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டத்துக்கு நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share