திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 25) அதிக கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை: திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, அக்டோபர் 24-ந் தேதி இரவு 10 மணி முதல் அக்டோபர் 25-ந் தேதி காலை 7.00 மணி வரை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் யாரும் கொடைக்கானல் மலைப்பாதை பகுதியில் பயணம் மேற்கொள்ள வேண்டாம்.
குறிப்பாக, கொடைக்கானலில் உள்ள குணா குகை, பைன் காடு, தூண் பாறை, மோயர் பாயிண்ட், மன்னவனூர், பிரையன்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், சில்வர் கேஸ்கேட் அருவி, பேரிஜம் ஏரி, கிரீன் வேலி வியூ, டால்பின்ஸ் நோஸ், பேரி அருவி ஆகிய அனைத்து சுற்றுலாத் தலங்களும் உடனடியாக மூடப்பட்டுள்ளன.
எனவே, பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் கொடைக்கானலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும், அங்கு உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க வேண்டும். இவ்வாறு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.
