மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய வலுவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று (அக்டோபர் 24-ந் தேதி) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று இரவு வெளியிட்ட அறிக்கை: வங்க கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அந்தமான் தீவுகளில் உள்ள ஸ்ரீ விஜயபுரத்திலிருந்து வடக்கு-வடமேற்கே 510 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 820 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து 910 கி.மீ. தொலைவிலும், மச்சிலிப்பட்டினத்திலிருந்து கிழக்கே 1,020 கி.மீ. தொலைவிலும், பாபட்லாவிலிருந்து கிழக்கே 1,100 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
அக்டோபர் 26-ல் புயலாக…
இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் முதலில் தெற்கு நோக்கி நகர்ந்து, நாளை (அக்டோபர் 25) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். பின்னர் படிப்படியாக மேற்கு-வடமேற்கு திசையில் திரும்பி நகரும்.
அக்டோபர் 26-ந் தேதி அதிகாலை 5.30 மணியளவில், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெறும்.
தொடர்ந்து அக்டோபர் 27-ந் தேதி அதிகாலை 5.30 மணியளவில், மத்திய மேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக மேலும் வலுப்பெறும்.

அக்டோபர் 28-ல் கரையைக் கடக்கும் அதி தீவிர புயல்- எங்கே?
அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகரும் இந்தப் புயல், மேலும் வலுப்பெற்று அதி தீவிர புயலாக (Very Severe Cyclonic Storm) மாறும். அக்டோபர் 28-ந் தேதி அதிகாலை 5.30 மணியளவில் ஆந்திர கடற்கரைக்கு அருகே மத்திய மேற்கு வங்கக்கடலை வந்தடையும்.
அன்றைய தினம் காலை 11.30 மணியளவில், ஆந்திர மாநிலம் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே, ஆந்திரா மற்றும் ஏனாம் கடற்கரைகளை அதி தீவிர புயலாகக் கடக்க வாய்ப்புள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 115 முதல் 125 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடையிடையே காற்றின் வேகம் மணிக்கு 140 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.
