சுள்ளான் மதன் கொலை: மேலும் 3 பேர் கைது.. சோசியல் மீடியா பதிவுகள் மீது 24 வழக்குகள்- 74 ’இன்ஸ்டா’ அக்கவுண்ட் முடக்கம்!

Published On:

| By Mathi

Sullan Mathan- Sivaganga Police

சிவகங்கையில் ‘ரவுடி’ சுள்ளான் மதன் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்தக் கொலை தொடர்பான சோசியல் மீடியா பதிவுகள் மீது 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 77 சோசியல் மீடியா அக்கவுண்ட்டுகளும் முடக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலமங்கலத்தில், கடந்த 18.10.2026 அன்று மதியம் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான மதன் @ சுள்ளான் மதன் (26), த/பெ. சக்தி, புதுப்பட்டி, சிவகங்கை என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிவகங்கை நகர் காவல் நிலைய குற்ற எண். 575/2026, பிரிவுகள் 191(2), 191(3), 103(1) BNS-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இவ்வழக்கில் ஏற்கனவே 11 எதிரிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 24.10.2026 அன்று மேலும் 3 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள்

ADVERTISEMENT
  • அதிபதி ராஜா (26), த/பெ. அய்யனார், சிவகங்கை
  • மணிகண்டன் (25), த/பெ. சரவணன், சிவகங்கை
  • விஜய் (19), த/பெ. சுந்தரம், விருதுநகர்

கைது செய்யப்பட்ட மேற்கண்ட 3 எதிரிகளும் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளனர். இவ்வழக்கில் இதுவரை மொத்தம் 14 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற எதிரிகளைக் கைது செய்வதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிரமாகத் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தலைமறைவாக உள்ள மற்ற எதிரிகளையும் விரைவில் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சமூக வலைதள பதிவுகள் மீது தீவிர கண்காணிப்பு

இக்கொலை வழக்கு தொடர்பாக, சமூக நல்லிணக்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துகள் மற்றும் புகைப்படங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை இவ்வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட பதிவுகள் தொடர்பாக 24 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 74 இன்ஸ்டாகிராம் கணக்குகள் மற்றும் 3 பேஸ்புக் கணக்குகள் என மொத்தம் 77 சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

காவல்துறை எச்சரிக்கை

சட்டம் ஒழுங்கைப் பாதிக்கும் வகையிலும், சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிடுவோர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்வதுடன், கடுமையான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என சிவகங்கை மாவட்ட காவல்துறை எச்சரிக்கிறது. இவ்வாறு சிவகங்கை மாவட்ட காவல்துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share