அடுத்த 48 மணி நேரம்.. ”அர்னாப்” புயல்.. தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. டெல்டா வெதர்மேன் சொல்வது என்ன?

Published On:

| By Mathi

Arnab Cyclone- Tamil Nadu

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் முதல் தென் மாவட்டங்கள் வரை அடுத்த 48 மணிநேரத்தில் பரவலாக கனமழை பெய்யும் என்றும் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் அக்டோபர் 15-ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. பருவமழையின் முதல் சுற்று தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த முதல் சுற்று மழைப்பொழிவு அக்டோபர் 26-ஆம் தேதி இரவு வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள கடலோரப் பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. மறுபுறம் மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அக்டோபர் 26-ஆம் தேதி புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது. இந்தப் புயலுக்கு வங்கதேசம் பரிந்துரைத்த ‘அர்னாப்’ என்ற பெயர் சூட்டப்படும்.

ADVERTISEMENT

தமிழகத்தில் ஏன் கனமழை?

அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மீண்டும் தமிழகத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் இருந்து ஈரப்பதம் நிறைந்த காற்று தமிழகத்தை நோக்கி வரும்.

இரண்டு காற்று சுழற்சிகளின் தாக்கத்தால் தமிழகத்தில் காற்று குவிதல் அதிகரித்து, பல மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT

பகல் நேரத்தில் வெயில் அடித்தாலும் மாலை, இரவு, நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் திடீரென கனமழை பெய்யும். சில பகுதிகளில் குறுகிய நேரத்திலேயே அதீத கனமழை பெய்வதற்கும் வாய்ப்புள்ளது.

சென்னையில் எப்போது கனமழை?

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வடகோடி மாவட்டங்களில் அக்டோபர் 25, 26 ஆகிய தேதிகளில் பரவலாக கனமழை பெய்யக்கூடும்.

குறிப்பாக இரவு, நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் விட்டு விட்டு கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதேபோல ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை

மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் அக்டோபர் 25, 26 ஆகிய தேதிகளில் நல்ல மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. பல இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

குறிப்பாக இதுவரை பரவலாக மழை பெறாத வட மாவட்டங்களிலும் அடுத்த 2 நாட்களில் நல்ல மழை பெய்வதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும். கோவை மாவட்டத்தின் வால்பாறை, சின்னக்கல்லார் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதீத கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

தென் மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?

மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் அக்டோபர் 25, 26 ஆகிய தேதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும். குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

அர்னாப் புயல் தமிழகத்தைத் தாக்குமா?

வங்கக்கடலில் உருவாகும் அர்னாப் புயல் ஆந்திராவை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயல் தொடர்ந்து தீவிரமடைந்தால் மத்திய அல்லது வடக்கு ஆந்திரா நோக்கி நகர வாய்ப்புள்ளது. அதேசமயம் புயலின் தீவிரம் குறைந்து வேகமாக மேற்கு நோக்கி நகர்ந்தால் தெற்கு ஆந்திராவில் கரையைக் கடக்கவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு தெற்கு ஆந்திரா நோக்கி நகரும் பட்சத்தில் சென்னை உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களுக்கு மழை கிடைக்கலாம்.

ஆனால் காவிரி டெல்டா, தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அர்னாப் புயலால் நேரடியாக மழைப்பொழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை. இந்த மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு எதிர்பார்க்கப்படும் கனமழைக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியே முக்கிய காரணமாக இருக்கும். அர்னாப் புயல் எந்தப் பகுதியை நோக்கி நகரும் என்பது அக்டோபர் 26-ஆம் தேதி மேலும் தெளிவாகத் தெரியவரும்.

அக்டோபர் 29 வரை மீனவர்களுக்கு எச்சரிக்கை

2 காற்றழுத்த தாழ்வுப் பகுதிகளின் தாக்கத்தால் கடல் சீற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக அக்டோபர் 25-ஆம் தேதி இரவு முதல் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கக்கூடும்.

எனவே அக்டோபர் 25-ஆம் தேதி இரவு முதல் அக்டோபர் 29-ஆம் தேதி வரை மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஏற்கனவே ஆழ்கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் கரைக்குத் திரும்புவது நல்லது.

இடிமின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும்

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடிமின்னலின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும். மழை மேகங்கள் மெதுவாக நகரும் என்பதால் குறிப்பிட்ட சில இடங்களில் குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

எனவே இடிமின்னலின்போது பொதுமக்கள் மரங்களுக்கு அடியில் நிற்பதையும், விவசாயிகள் திறந்தவெளியில் வேளாண் பணிகளை மேற்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.

ஒட்டுமொத்தமாக அக்டோபர் 25, 26 ஆகிய இரண்டு நாட்களும் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையின் முதல் சுற்று தீவிரமடையும். அக்டோபர் 26-ஆம் தேதி இரவு வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான சூழல் நிலவுகிறது. இவ்வாறு டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share