ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநில சட்ட மேலவையில் தந்தை பெரியாரின் சமூகச் சீர்திருத்தப் பணிகளை அங்கீகரித்தும், பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் பணிகளைப் பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாநில சட்ட மேலவையில் கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி கிரீன்ஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் கேட் ஃபேர்மன் (Cate Faehrmann), தந்தை பெரியாரின் சமூகநீதிப் போராட்டங்கள், சுயமரியாதை இயக்கம், பெண்களின் உரிமைகளுக்கான பங்களிப்புகள் ஆகியவற்றைப் பாராட்டும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
இந்தத் தீர்மானத்தில் தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்புப் போராட்டம், கல்வியில் இடஒதுக்கீடு, பெண்களின் உரிமைகள், சமூக சமத்துவம் ஆகியவற்றுக்கான பங்களிப்புகள் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நியூ சவுத் வேல்ஸ் மாநில சட்ட மேலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:
2026 செப்டம்பர் 20-ஆம் தேதி, தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆஸ்திரேலிய பெரியார்–அம்பேத்கர் சிந்தனை வட்டம் சார்பில் பரமட்டா பூங்காவில் முதல்முறையாக ‘சமத்துவ நடைபயணம்’ நடத்தப்பட்டது.
இந்த நடைபயணத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் ஜாதி ஒழிப்புக் கொள்கைகளை ஆதரிக்கும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து பங்கேற்றனர்.
1925-ஆம் ஆண்டு, தற்போதைய கேரள மாநிலத்தில் ஜாதிப் பாகுபாட்டுக்கு எதிராக நடைபெற்ற வைக்கம் சத்தியாகிரகப் போராட்டத்தில் பெரியார் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து, ஜாதி ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து, சமூக சமத்துவத்தையும் மனித கண்ணியத்தையும் நிலைநாட்டுவதற்காகச் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.
மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமமானவர்கள் என்பதே பெரியாரின் அடிப்படைக் கொள்கை. ஜாதி, வர்க்கம், இனம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்களிடையே பாகுபாடு காட்டுவதையும், இவற்றின் பெயரால் சமூகத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பதையும் அவர் எதிர்த்தார்.
பெரியாரின் சுயமரியாதை இயக்கம் பெரும்பாலும் தமிழ் பேசும் பகுதிகளில் செயல்பட்டாலும், சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ளும் பல்வேறு சமூக மக்களிடமும் ஆதரவைப் பெற்றது.
கல்வியில் சமூகநீதியை நிலைநாட்ட பெரியார் மேற்கொண்ட போராட்டங்கள், 1951-ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவரப்படுவதற்கு உதவின. இந்தத் திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்ட 15(4) பிரிவு, சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வியில் இடஒதுக்கீடு வழங்க வழிவகுத்தது.
குழந்தைகளை வளர்ப்பதில் பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் சமமான பொறுப்பு இருக்க வேண்டும் என்று பெரியார் வலியுறுத்தினார். பெண்கள் தங்கள் உடல் மற்றும் வாழ்க்கை தொடர்பான முடிவுகளைத் தாங்களே எடுக்கும் உரிமை பெற்றிருக்க வேண்டும் என்றும், இனப்பெருக்க உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இவற்றைச் சுயமரியாதையின் அடிப்படைகளாகக் கருதினார்.
மேலும், 2024-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேஆஸ்திரேலியாவிலும் ஜாதிப் பாகுபாடு நிலவுவதை அங்கீகரிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய பெரியார்- அம்பேத்கர் சிந்தனை வட்டம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதன் விளைவாக, 2022-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையம் ஜாதிப் பாகுபாட்டை இனவெறியுடன் தொடர்புடைய ஒரு வகையான பாகுபாடாக தேசிய இனவெறி எதிர்ப்புக் கட்டமைப்பில், ஜாதிப் பாகுபாட்டைத் தடுப்பதற்கான சட்டப் பாதுகாப்புகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக ஆஸ்திரேலிய பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டம் மேற்கொண்டு வரும் பணிகளை இந்தச் சட்ட மேலவை பாராட்டுகிறது.
மேலும், ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கை தொடர்பான முடிவுகளைத் தாங்களே எடுக்கும் உரிமை, அனைவருக்கும் சம உரிமை, பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்தச் சட்ட மேலவை அங்கீகரிக்கிறது. இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் விவரம்:
கி.வீரமணியின் நன்றி கலந்த பாராட்டு
இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், ”கிரீன்ஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கேட் ஃபேர்மன் முன்மொழிந்த இந்தத் தீர்மானம், ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான தந்தை பெரியாரின் போராட்டம், பெண்களின் விடுதலைக்கான அவரது குரல், மற்றும் சமத்துவம், பகுத்தறிவு, மனித கண்ணி யம் ஆகியவற்றின் மீதான அவரது அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பாராட்டி அங்கீகரித்துள்ளது.
தந்தை பெரியாரின் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் ஓர் உலகத் திருநாளாகவே திகழ்ந்து வருவதைவிட, பெரியார் தொண்டர்களுக்கு வேறென்ன கைம்மாறு வேண்டும்?
அவையின் கவனத்திற்குத் தீர்மானம் கொண்டு (இந்தத் தனி நபர் தீர்மான எண்.3721) செல்லப்படுகிறது. அப்போது அவைத் தலைவர், பென்பிராங்கிளின், “திருமதி ஃபேர்மேன் முன்மொழிந்த இத்தீர்மானம், பரிசீலனைக்கு வருகிறது. இதற்கு ஏதேனும் ஆட்சே பனை உள்ளதா?” என்று கேட்கிறார்.
அவையின் அதிர்ந்த குரல் என்ன தெரியுமா?
‘‘எந்த மறுப்பும் இல்லை, ஆதரவு அதிகம்’’ என்று கூறி, திருமதி ஃபேர்மனைப் பேச அழைக்கிறார்.
பாராட்டத்தக்க அந்தத் தீர்மான கர்த்தாவான அந்த அம்மையார், ‘தந்தை பெரியார் எப்படி தொண்டு செய்து பழுத்த பழம்? ஏன் அவரது அறிவினை, செயலினைப் போற்றிப் பாராட்டிட வேண்டும்?’ என்று அடுக்கடுக்கான காரணங்களை அள்ளி அள்ளி வைக்கிறார். பெரியார் உலக மயமாகிறார் என்பதில் இனியும் அய்யம் உண்டோ?
நன்றி கலந்த பாராட்டுகளைக் ‘கிரீன்ஸ்’ கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கேட் ஃபேர்மன் அம்மையார் அவர்களுக்கும், ஆஸ்திரேலிய பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத் தோழர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
